உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

அறிஞர் அண்ணா



நேரிட்டது. என் மனம் அந்த நிலையில் எவ்வளவு பாடுபட்டிருக்கும்? நான் சொன்னால் யார் நம்புவார்கள்? பாய்ந்தோடி வரும் புலியைக் கண்டு பயந்து, பாழுங்கிணற்றில் குதித்தாவது உயிரைக் காப்பாத்திக் கொள்வோம் என்று எண்ணுவதில்லையா? வறுமை என்னை வதைக்கிறது. அதனை நான் வதைக்க வேண்டுமானால், மிராசுதாரின் வைப்பாட்டியாக இசையவேண்டும்.

அப்பா படுக்கையில் புரளுவதும், அம்மா கண்களைக் கசக்கிக் கொள்வதும், சாந்தா திகைத்துக் கிடப்பதும், என் மனக் கண்களிலே சதா தாண்டவமாடின. விபரீத எண்ணங்கள் என் மனதிலே உதித்தன.

"காந்தா? அடி முட்டாளே! தானாக வருகிற சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளாதே."

வேண்டாமடி காந்தா! பாபக்கிருத்யம் செய்யாதே. ஏழேழு ஜென்மத்துக்கும் விடாது. கெட்ட எண்ணங் கொள்ளாதே. கடவுள் தண்டிப்பார்.

"அவர் யார் உன்னைத் தண்டிக்க! உன் கஷ்டத்தைப் போக்க இதுவரை அவர் என்ன உதவி செய்தார்? சீச்சி! பைத்தியக்காரி, பணம் இல்லை கையிலே. படுக்கையிலே அப்பா சாகக் கிடக்கிறார். அடுப்பிலே காளான் பூத்திருக்கிறது. உலகிலே பணம் படைத்தவர்கள் உல்லாசமாக வாழுகிறார்கள். நீ வறுமையால் உருக்குலைந்து போகிறாய். உன் அப்பா பிழைக்கவும், குடும்பம் நடக்கவும், நீ வாழவும் மிராசுதாரர் மார்க்கம் காட்டுகிறார். அதைப் பாரடி! பார்த்துப் பிழை"

"பணத்துக்காக உன் மானத்தை இழக்காதே."

"மானம் வேறு தொங்குகிறதா உனக்கு? உலகில் உண்ணச் சரியான உணவின்றி வாழ வழியின்றி இருப்பதனால், மானம் போகவில்லையா? சுத்தத் தரித்திரம், அன்னக் காவடி, நித்தியப் பட்டினி என்று இப்போது உலகம் உன் குடும்பத்தைத் தூற்றுகிறதல்லவா? கடன்காரன் கேட்கிறானே. வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லையா, வயிற்றுக்கு என்ன தின்கிறீர்கள், என்று, மானம்