உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்

45



இருக்கிறதா? அந்த நேரத்திலே, உன் குடும்பத்தை யாரடி மதிக்கிறார்கள்? பணமில்லை என்றால் பிணந்தானே!"

"ஏழையாக இருக்கலாம். சகித்துக் கொள்ளலாம். ஆனால் விபசாரம் செய்து வாழ்க்கையை நடத்துவது என்றால் உலகம் வெறுக்கும்."

"உலகம் வெறுக்குமா? பேஷ்! பேஷ்! காந்தா? இப்போது உலகம் உங்கள் குடும்பத்திடம் பாசம் வைத்திருக்கிறதா? உலகம் உங்களிடம் ஆசை கொண்டால், இப்ப ஏனடி உண்ணவும் வழியின்றிக் கிடக்கிறீர்கள்? உலகமாம், உலகம்! எந்த உலகத்தைப் பற்றி உளறுகிறாய். புத்தகங்களிலே படிக்கிறாயே அந்த உலகமா! பைத்தியமே! அது வேறு! உண்மை உலகம் வேறு. ஏழைகளின் உலகமே தனிரகம். அதனை ஏறெடுத்துப் பார்க்காது, பணக்கார உலகம். பணக்கார உலகத்தின்மீது படை எடுத்துச் செல். உன் அழகையும் இளமையையும் அம்புகளாகக் கொள். மிராசுதாரர் வில்லாக வளைவார். உன் மனம் போனபடி, அம்புகளைப் பணக்கார உலகில் பறக்க விடு. அப்போது அந்த உலகம் உன் காலடியில் வந்து விழும். செய்து பார்."

"காதைப் பொத்திக் கொள்ளடி காந்தா! அத்தகையப் பேச்சைக் காதால் கேட்பதும் தோஷம். பணத்தைக் கண்டு மயங்காதே.அது ஒரு பிசாசு!"

"பணமா பிசாசு? அந்தப் பிசாசுதானடி உலகிலே பூஜிக்கப்படுகிறது. அதன் கடாட்சம் இருப்பவர்களைத் தான், பூர்வ புண்ணியத்தால், நிம்மதியாக செல்வமாக குபேர சம்பத்துடன் வாழுகிறார்கள் என்று, உலகம் துதிக்கிறது. அதன் சக்தி அபாரம்! உனக்குத் தெரியாதா? அனுபவமில்லையா? இதோ உன் அப்பாவைப் பார். அவர் சாவதும், பிழைப்பதும், அந்தப் பிசாசைப் பொறுத்துத் தானே இருக்கிறது."

"ஆமாம்! ஆனாலும்....."

என் மனதிலே இந்தச் சொற்போர் நடந்தபடி இருந்தது.சாதாரண காந்தாவுக்கும் சஞ்சலப்படும் காந்தாவுக்கும் இந்தச் சம்பாஷணை நடந்து வந்தது.