உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

அறிஞர் அண்ணா



அப்பா ஈனக்குரலுடன் இருமும் வேளையிலும், அம்மா விம்மும் வேளையிலும், தங்கை சாந்தா தன் முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொள்ளும்போதும். காசு தராவிட்டால் மருந்து கிடையாது என்று டாக்டர் கண்டிப்பாகக் கூறும்போதும், "காந்தா! இன்னமும் யோசிக்கிறாய்?" என்று ஒரு குரல் என் செவியிற் கேட்கும். "ஜாக்கிரதை காந்தா உன் கற்பை இழக்காதே" என்று மற்றோர் குரல் கூறும்.

குடும்பத்திலே வேதனை, அப்பாவின் உடலிலே வேதனை, என் மனதிலும் வேதனை, இந்த சோதனையில் நான் தத்தளித்தேன். உலகிலே வழக்கப்படி காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. என் மனதிலே எரிமலை இருப்பது பற்றி யாருக்கு என்ன கவலை. எங்கள் கஷ்டத்தை நிவர்த்திக்க ஒருவரும் முன் வரவில்லை. கண்ணாடியைக் காண நேரிடும்போது, "ஆமாம்! காந்தா, பார்த்தாயா? நீ எவ்வளவு இளையவள், நல்ல முகவெட்டு, அழகு ததும்புகிறது. ஆனால் அசடே! எவ்வளவு அவதிக்கு ஆளாயிருக்கிறாய். ஏன் இந்தச் சிறையிலே கிடக்கிறாய்? வா வெளியே! உன்னை வரவேற்க மிராசுதாரர் காத்துக் கொண்டிருக்கிறார்” என்று காந்தா நம்பர் இரண்டு கூறுவாள். காந்தா, நம்பர் ஒன்று "வேண்டாம் விபரீதப் புத்தி வினாசகாலே என்று எச்சரிக்கை செய்வாள். இந்த இரு காந்தாக்களின் போராட்டம் இடைவிடாது நடந்தது. இறுதியில் வறுமையால் வாடிய காந்தா நம்பர் ஒன்று வாழவேண்டுமென்று ஆசை கொண்ட காந்தாவிடம், இரண்டாம் நம்பர் காந்தாவிடம், தோற்றுத்தான் போனாள். மிராசுதாரர் அப்பாவை, மதனபள்ளிக்கு அனுப்பினார். அவருக்கு இல்லாத அக்கரையா? விஷயம் அப்பாவுக்குத் தெரியாதபடி மூடி வைத்தேன். ஊராரின் வாயை மூட முடியுமா? அம்மாவின் கண்ணீர் பெருகிற்று. "தலையிலே இடிவிழுந்ததேடி பாவி," என்று அம்மா வைதார்கள். நான் பழைய காந்தா என்று எண்ணிக்கொண்டு! மிராசுதாரரின் மடியிலே விழுந்த எனக்கு, அம்மாவின் அழுகை பற்றிய கவலை உண்டாகவில்லை. நான் ஆயிரந் தடவை அழுதிருக்கிறேன் முன்பு! அப்பா பிழைத்துக் கொள்வார்