உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்

47



அது போதும் என்று இருந்தேன். ஆனால் அப்பா மதனபள்ளியிலேயே இறந்து விட்டார். பூவையும் குங்குமத்தையும் அம்மா இழந்தார்கள். நானோ, அழுதேன், புரண்டேன், அலறினேன். பிறகு, கண்களைத் துடைத்துக் கொண்டேன். புதிதாக எனக்குக் கிடைத்த பூவும் குங்குமமும் பெற்றுக் கொண்டு, புது உலகில் வசிக்கப் புறப்பட்டேன்.

மிராசுதாரின் ஏற்பாட்டின்படி நான் வீட்டை விட்டு வெளியேறி தனிப் பங்களாவில் வசிக்கலானேன். நான் வாழ்வதுடன் என் உதவியைக் கொண்டு அம்மாவும் தங்கையும் வாழலாம். பணம் தர நான் தயாராக இருந்தேன். அம்மா ஒரு காசுகூட அந்த விபசாரியிடமிருந்து பெறமாட்டேன் என்று கூறிவிட்டார்கள். அம்மாவுக்குத் தெரியாது நான் எப்படி எப்படி குடும்பத்துக்கு உதவி செய்தேன் என்பது. ஏலம் போன வீட்டை மீட்டேன். என் பேருக்கு விலைக்கு வாங்கினேன். வீம்புக்கு அதை உயில் வேறு கைக்குப் போக விடுவேனோ? குடும்பம் நடத்த என்னிடம் பணம் வாங்க மறுத்து விட்டார்கள். ஆனால் நான் மாதா மாதம் பல அறநிலையங்களின் பெயர் வைத்துப் பணம் அனுப்பிக் கொண்டே இருந்தேன். அம்மாவுக்கு விஷயமே தெரியாது.

அம்மாவுக்கு ஒரு தம்பி உண்டு. சுத்த தத்தாரி. நாங்கள் கஷ்டப்பட்ட காலத்திலே கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. நான் மிராசுதாரிடம் சிநேகிதமான பிறகு என்னை அண்டினான். அவன் அந்த உலகத்து ஆசாமி. அவன் மூலம் பணம் அனுப்புவேன். அவன்தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து அக்காவின் கஷ்டத்துக்கு உதவுவதாகக் கூறி அம்மாவை ஏய்த்து வந்தான். இந்தத் தாராள தபால் சேவகன் உத்தியோகத்துக்குத் தக்க சம்பளம் தந்தும் வந்தேன். என்னிடம் பணமா இல்லை? பணம் என் பாதத்தை தொட்டு முத்தமிட்டுக் கொண்டிருந்தது. மிராசுதாரின் "மோகனாங்கி" ஆன பிறகு பணமே எனக்குப் பரிவாரம். உல்லாச உலகில் நுழைந்தேன். என் ஏற்பாட்டின்படி சாந்தாவுக்கு சங்கீத வாத்தியார் அமர்த்தப்பட்டார். அம்மா தன் தம்பியின் கருணைப் பிரவாகம் இது என்று எண்ணினார்கள்.