உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்

49



விடவேண்டும். எனக்கு என்ன தேவை என்பதை ஆராய்ந்து பார்த்து குறிப்பறிந்து நடப்பதே அவருக்கு வேலை. அவர் மனம் மகிழ்ந்தால்தான் மனோகரமாக வாழ முடியும் என்று கருதினார். பெட்ரோல் போடாத மோட்டார் ஓடுமா? அது போல் குஷியில்லாத குட்டியைக் கொண்டு எப்படிக் காலந் தள்ளுவது? குட்டிக்கு குஷி பிறக்க வேண்டுமானால் என்ன வேண்டுமோ அதை வரவழைத்துத் தரத்தானே வேண்டும் என்று மிராசுதார் கூறுவார். அது நான் நுழைந்த புது உலகின் சட்டம். என் அழகுக்கு அவர் அடிமை. அந்த அழகு வளர வளர அவரது அடிமைத்தனம் வளரும். ஆகவே என் அழகை அதிகரிக்கச் செய்வதிலே எனக்கு அக்கரை பிறந்ததிலே ஆச்சரியம் என்ன? என்னுடைய "பாஷன்" தான் "மாடல்" ஆகிவிட்டது. "ஜாலி கர்ல்" என்பது எனக்குப் புது உலகம் தந்த பட்டம். "லக்கிபெலோ" என்று மிராசுதாரைப் பாராட்டுவார்கள். எவ்வளவு வறுமையில் வாடினேனோ, அவ்வளவு செல்வத்தில் புரண்டேன்.

தரித்திர நாராயணியாக இருந்த நான் தங்களுக்குச் சுந்தரியானேன், விசாரம் பஞ்சாய்ப் பறந்தது. பொன் குடத்துக்கு பொட்டிட வேண்டுமா என்பார்கள் பழமொழி. ஆனால் பொன் குடம் மெருகு பூசாது இருந்தால் எப்படி இருக்கும்? வறுமையில் இருக்கும்போது அழகாகத்தான் காணப்பட்டேன். ஆனால் முகத்திலே ஒருவித சோகம். கண்களிலே பசிக்குறி காணப்பட்டு வந்தது. புது உலகில் கிடைத்த மெருகு என் அழகை அதிகரிக்கச் செய்தது. மேகத்தை விட்டு வெளியேறிய நிலவு எப்படி இருக்கிறது. வறுமையை விட்டு நீங்கி வெளி வந்த என் வசீகரமும் அப்படியே இருந்தது. என் புது வாழ்க்கையில் நான் வாழ்வின் மதுபானத்தை மனங் கொண்ட மட்டும் பருகினேன். பரவசமானேன். எங்கள் அப்பாவை விரட்டிய மிராசுதாரர், என் விழியைத் தன் வழியாகக் கொண்டு என் பேச்சை வேதமாகக் கொண்டு என் மடியைத் தேவலோகம் எனப் புகன்று, என் சரசத்தை எதிர் நோக்கிக் கிடக்கும்போது, நானே பெருமையும் அடைந்ததுண்டு. பணம் என் கையிலே புரளும்போது பூரித்தேன். வசீகர வாழ்விலே வேகமாகப் புகுந்தேன். ஆழமாக நுழைந்தேன். ஆனந்த