உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

அறிஞர் அண்ணா



வல்லியானேன். உலகம் உயிரோடு என்னை முன்பு வாட்டிக்கொண்டிருந்தது. இப்போது? என் ஏவலாளியாயிற்று. இந்த நேரத்தில் என் அழகில் சொக்கி மிராசுதார் கிடக்கவும், மிராசுதாரருக்குக் கிடைத்தவள் நமக்குக் கிடைக்கவில்லையே என்று வேறு குட்டிக் குபேரர்கள் ஏங்கவும், ஆறு ஆண்டுகள் மூழ்கிக் கிடந்தேன். மிராசுதாரர் எனக்கு அலாவுதீன் தீபமானார். சோதிமயமான வாழ்வு வாழ்ந்தேன். ஊரார், அதாவது நான் முன்பு வசித்துக் கொண்டிருந்த உலகில் யார் என்ன பேசிக் கொண்டிருந்தார்களோ தெரியாது. அதனை கவனிக்க எனக்கு நேரமில்லை. விதவிதமாகச் சிங்காரித்துக் கொள்ளவும், வகைவகையான களியாட்டங்களில் ஈடுபடவும். பல பக்தர்களுக்குத் "தரிசனம்" தரவும், பலபேர் தவமிருந்து வரம் பெறாது திகைக்கக் கண்டு நகைக்கவும்; நேரம் இருந்ததே தவிர, அந்த பழைய உலகைப் பற்றி எண்ண நேரமேது? என் உல்லாச வாழ்வு உச்ச நிலையில் இருக்கையில் ஓர் நாள், இத்த சமயத்தில் சோமு என்னைக் கண்டால் என்ன எண்ணுவான்? என்று ஒரு புதுமையான எண்ணம் தோன்றிற்று. அந்த எண்ணம் வளரவும் தொடங்கிற்று. சில நாட்கள் சென்றன. சோமு என்னைக் காணும் சம்பவம் நிகழ்ந்தது.

பசி கிடையாது! தூக்கம் கிடையாது! தூக்கம் வராது! நாரதரின் தம்பூரு, நந்தியின் மத்தளம், அரம்பை, ஊர்வசியின் நடனம், காமதேனு, கற்பகவிருட்சம், தங்கக் கோபுரம், பவள மாளிகை, பச்சைப் புற்றறை, சிங்கார நந்தவனம், பாரிசாத மணம்; இன்னும் 'தேவலோகத்தை' எப்படி எப்படியோ வர்ணிக்கிறார்கள். இவைகளைப் பெற நாம் ஏதோ புண்ணியக் காரியம் செய்யவேண்டும். செய்தால் இத்தகைய உலகத்திலே போய்ச் சுகமாக வாழலாம். கெட்ட காரியம் செய்தால் அக்கினிக் குண்டம் அகன்ற வாய்ப் பாம்பின் புற்று, நெருப்புச் சிலை, முள் பீப்பாய், செக்கு செந்தேள், ஈட்டி முனை, அரிவாள் நுனி, சம்மட்டி அடி, சக்கரம் என்று ஏதேதோ பயங்கரமான பொருள்கள் நிறைந்த நரகலோகத்தில் புகவேண்டும் என்று கூறுகிறார்கள். என்னைக் கேட்டால் சொல்வேன். பணம் படைத்தவர்கள்,