உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்

63



வேண்டுமானால், இதைக் கவனித்தாலா முடியும்? பிறர் அழ, அதுதான் வாழும் பேர் வழி உலகில் நான் ஒருத்திதானா? வட்டிக்காரர்கள் வாழ்கிறார்களே. நான் மட்டும் ஏன் வீண் வேதாந்தம் படித்தும் பாழ்படவேண்டும்? ஒருவர் வாழ மற்றொருவர் பாழாக வேண்டுமா என்று என்னைக் கேட்டால் கூடாது என்றுதான் சொல்லுவேன். ஆனால், நீ வாழ்வது அவ்விதமாக இருக்கிறதே “ருக்கு தன் கணவனை பிரிந்து வாழுகிறாளே. நகைகள் போய் விட்டன என்று நொந்து கொள்கிறாளே. அவளுடைய கஷ்டத்துக்கு நீதானே காரணம். அவள் அழ, நீ சிரித்துக் கொண்டு சிங்காரியாக வாழ்கிறாயே, தகுமா?" என்று கேட்பீர்கள், நான் சொல்லுகிறேன். "தகாதுதான், ஆனால் என்னைக் கேட்கிறீர்களே, மற்றவர்களைக் கேட்பதுதானே! பலருடைய சிங்கார வாழ்வு இவ்விதமாகத்தானே இருக்கிறது? என்னைப்போல் இன்பத்தை விற்பவரைத்தானே குறை கூறுகிறீர்கள். இதையும் கொடாது ஏய்த்துப் பிழைக்கும் பேர்வழிகள் ஏழைகளின் ஏமாளித்தனத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு சொகுசாக வாழ்வோர் இல்லையா? இதோ என் மிராசுதாரரின் வாழ்வு இன்பமயம், அவரது பண்ணையாள் பகல் பட்டினி. இதையும் கேளுங்கள், இத்தகைய முறையே கூடாது என்று சொல்லுங்கள். உலகத்தை ஒழுங்காக அமைத்து விடுங்கள். நான் மட்டுமா? ஏய்த்துப் பிழைக்கும் எவருக்கும் இடமில்லாதபடி செய்து விடுங்கள். அது நல்லது என்பேன், என்னை மட்டும் தண்டித்து விட்டு பிறரைச் சும்மா விட்டுவிடுவதென்றால், அது தகாது.

என்னுடைய டாம்பீக வாழ்வுக்கு ஏற்ற விதமாக நடந்து கொள்ள சோமு முயன்றதில் அபாரமான செலவு ஏற்பட்டுக் கொண்டே வந்தது. வேலையும் போயிற்று. வேறு வேலைக்குச் செல்லவில்லை. தானே யாரையோ பிடித்து ஒரு மோட்டார் ஏஜென்சி எடுத்தார். அதற்கு பாக்கி இருந்த நகைகள் அடகு. பாவம், தனது நிலையை மட்டும் என்னிடம் காட்டிக் கொள்வதில்லை. சோமு மட்டுமா? மிராசுதாரரே சற்று அடங்கிக் கிடந்தார். அவருக்கு வறட்சி, ஆகவே சோமு விஷயமாக கண்டுங் காணாது இருந்து விட்டார். இவ்விதமாகவே மூன்றாண்டுகளுக்கு மேல் நடந்தது.