பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 63


மனிதன் தான் பெறும் உதவிகளுக்கு நன்றி பாராட்ட வேண்டுவது மிக மிக அவசியம் என்ற உண்மையை நம்முடைய நாட்டில் பெரியவர்கள் அனைவரும் மிக அழகாகவும், விரிவாகவும், அழுத்தமாகவும் கூறியுள் வாார்கள். "உப்பிட்டவரை உள்ளளவும் நினை," என்று பிறந்த பழமொழி நன்றி நினைத்தலின் அவசியத்தை நன்கு வலியுறுத்துகிறது. 'எவ்வளவு பெரிய உதவியைப் பெற்றால் நன்றி பாராட்ட வேண்டும்? மிகச் சிறிய உதவிக்குக்கூட நன்றி பாராட்ட வேண்டுமா?’ என்னும் சந்தேகம் யாருடைய மனத்திலாவது தோன்றப் போகிறதே என்று நினைத்துத்தான் மிகச் சாதாரணமான- எங்கும் எப்பொழுதும் கிடைக்கக்கூடிய-உப்பைக் கொடுத்தவர்களைக்கூட, சாகின்ற வரையில் ஒருவன் தினைந்து பார்க்க வேண்டும் என்று நம்மவர்கள் கூறினார்கள்.

நன்றி மறந்தவர்கள் மிகக் கொடியவர்கள் என்றும், அவர்கட்கு நரகந்தான் கிடைக்கும் என்றும் குறள் போன்ற அறநூல்கள் வலியுறுத்துகின்றன. நம்முடைய நாட்டிலே மட்டுமன்றி, ஏனைய நாடுகளிலும் இவ்வாறே நினைத் தார்கள் என்பதை ஷேக்ஸ்பியருடைய “நன்றி கொன்ற தன்மை, துரோகிகளின் கொடிய ஆயுதங்களைவிடக் கொடுமையானது!" என்ற அடி வலியுறுத்துகிறது. இலக்கியத்தில் காணப் பெறுகின்ற பாத்திரங்களுள் நன்றி மறவாத தன்மைக்காகச் சிறப்புப் பெற்றவர் முக்கியமாக இருவர். ஒருவன் கம்பராமாயணத்தில் காட்சி அளிக்கின்ற கும்பகர்ணன். மற்றவன் மாபாரதத்தில் வருகின்ற கர்ணன்.

பாரதப் போர் நடைபெறுகின்றவரையில் கர்ண லுக்குத் தான் யார் என்பது தெரியவே தெரியாது! அங்கநாட்டு அதிபதியாகிய அவனை, தம்முடைய பிள்ளை என்று சொல்லிக் கொண்டு, அதன் பயனை அடையப் பலர் முயன்றாலும், அம்முயற்சிகளெல்லாம் தோல்வியுற்றன. எனவே, ஏறத்தாழ இறுதிவரைத் தாய் தந்தையர் பெயர்