பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி ↔ 99

ஒவ்வோர் இரவும், அவன் வந்து, தன் வருகையை'அறிவிக் கும் குறியாகப் பறித்துப் போடும் நொச்சிப்பூ விழும் ஒலி கேட்காதா எனக் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு, விழிப்பாயிருந்து, அது கேளாமையால், அவன் வந்திலன் எனக் கொண்டு வருந்தியும், வரும் வழியில் அவனுக்கு யாதேனும் ஏதம் உண்டாயிருக்குமோ என அஞ்சியும் உயிர் வாழ்ந்து வந்தாள்.

ஒருநாள் தன் தோழியினிடம், "தோழி! காதலனைக் கண்டு மகிழ வேண்டும் எனும் வேட்கை மிகுதியால், மழைத் துளி உண்டு உயிர் வாழ்வதாய வானம்பாடிப் பறவை, அம்மழை மாறாது பெய்து, தன்னைக் காத்தல் வேண்டும் என்னும் கருத்தால், அம்மழையைப் பாடி வாழ்வதைப் போல், அவன் அன்பே என்னை வாழ்விக்க வல்லது ஆதலின், அவ்வன்பைப் பெறுதல் வேண்டி, அவன் வருகையை எதிர்நோக்கியும், என்னைக் காணும் ஆர்வம் உந்த வரும் அவன், வந்து என்னைக் காணாத விடத்து, வருந்தும் அவன் வருத்த நிலை எண்ணியும், இரவெல்லாம் உறங்காதிருந்து வருந்துகின்றேன் யான். இதையெல்லாம் அறியாத அவன், பேய் மழை பெய்யும் மாரிக் காலத்தில், இடியேறு இடிக்கும் இரவில், காட்டுக் கொடு விலங்கும், காட்டாறும், அணங்கும், ஆறலைக் கள்வரும் குறுக்கிடும் வழியை, இவள் அன்பால் அஞ்சாது கடந்து வந்த என்னை வரவேற்று மகிழாது, ஏமாற்றி விட்டனளே! எனப் பிழையை என் மீதேற்றி வருந்துவதை அறியப் பெரிதும் வருந்துகிறது என் உள்ளம். இதற்கு யாது செய்வேன் தோழி?” எனக் கூறி வருந்தினாள்.