பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 113

நாட்டை அடுத்திருந்த மற்றொரு மலை நாட்டிற்கு உரியானொருவன் மகளைக் கண்டு காதல் கொண்டான். அவளும் அவனைக் காதலித்தாள்.

இவர்கள் காதலை, இருவர் பெற்றோரும் அறியார். அதனால், அவ்விளைஞன், எவரும் காணாவாறு, இரவில் மறைந்து வந்து, அப் பெண்ணைக் கண்டு, மகிழ்ந்து செல்வானாயினன். அவன் வருகை ஒருநாள் தவறினும் அப் பெண் வருந்துவள். அவன் வாராமை கொண்டு வருந்து வாளைப் பிறிதொரு எண்ணமும் பற்றிப் பெருந்துயர் தந்தது. அவன் வரும் வழி, காடுகளையும், காட்டாறுகளையும், மலைகளையும், மடுக்களையும் கொண்டது. புலியும் களிறும் போரிட்டு வாழும் பொல்லாங்கு நிறைந்தது. அவ்வழி வருவார், ஆங்கு இடையூறு ஏதம் பெறாது, அவ்விடத்தைக் கடத்தல் அரிதினும் அரிதாம். வழியின் இக்கொடுமைகளை அறிந்த அவளை, இவ்வெண்ணம் பெருந்துயர்க்கு உள்ளாக்கும். அதனால், அவன் வாராதிருப்பினும் நன்று, என ஒருகால் எண்ணுவாள். ஆனால், அவன் பிரிவுத் துயர், அவளைப் பெரிதும் வருத்தவே, அவன் வருகையை நாள்தோறும் ஆர்வத்தோடு எதிர் நோக்கியிருந்தாள்.

பெரு மழையும், பேய்க் காற்றும் கலந்து கொடுமை செய்யும் மாரிக் காலம் என்றோ, அக்காலத்து இரவின் இடையாமம் என்றோ, எண்ணாது, உறங்காதிருந்து அவன் வருகையை எதிர் நோக்கியிருப்பாள். வந்து, தன் வருகையை அறிவிக்க அவன் எழுப்பும் ஒலிகளை எதிர் நோக்கி எதிர்நோக்கி ஏமாறுவள். அவ்வாறு ஏமாறியவள், ‘என்னைக் காண வந்து இடைவழியில் ஏதம் உற்றனனோ?

குறிஞ்சி-8