பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 இ. புலவர் கா. கோவிந்தன்

காட்டு வழியில், மாரிக் காலத்து இரவில், துணையும், இல்லாமல், தனித்து வருதல் தவறு என்பதையோ, ஆங்கு, நினக்கு யாதேனும் ஏதம் உண்டாயின், அக்கணமே, உயிர்விடத் துணிந்து நிற்கும் இவள் துயரையோ, அத்துயர் நிலைகண்டு அயலார் கூறும் அலரையோ, அது கேட்டுத் தாய் வழங்கும் வன்சொற்களையோ நீ அறிந்திலை. ஆகவே, அன்ப! இனி, இரவில் வாரற்க! இவளைக் கண்டு மகிழவேண்டின், மலைச்சாரலில், பாறைகள்மீது, கோலம் இட்டாற்போல் மலர்ந்து உதிர்ந்து கிடக்கும் மலர்களைக் கொணர்வான் வேண்டி, ஆங்குச் செல்லும் வழக்கம் உடையேம் யாம். ஆதலின், ஆங்குவரின், இவளைக் கண்டு மகிழ்தல் எளிதிற் கைகூடும். நினக்கும் ஏதம் இன்றாம். ஆகவே, ஆங்குப் பகற்காலத்திலேயே வந்து செல்க!” எனக் கூறினாள்.

இவ்வாறு தோழி கூறக்கேட்ட இளைஞன், "இரவில் வாராதே எனக் கூறிய இவள், பகலில் மகளிர் மலர் கொய்யும் மலைச் சாரலுக்கு வருமாறு கூறுகின்றாள். மலைச் சாரலுக்கு, இவர்களைப் போன்றே, வேறு பல மகளிர் வருதலும் கூடும். அதனால், ஆங்கு இவளைக் கண்டு மகிழ்தல் இயலாது. இதை அறிந்தும், இவள் இவ்வாறு கூறுகிறாள். காரணம், இரவில் மட்டுமல்லாமல், பகலில் வருவதையும் இவள் விரும்புகிலள். மறைந்து மறைந்து வந்து மகிழ்ந்து செல்லும் இக் களவொழுக் கத்தைக் கைவிட்டு, மணந்து மனையறம் மேற்கொண்டு வாழவேண்டும் என்ற இவர்கள் வேட்கையின் விளைவே யாம். அதை விளங்க உணர்த்த மாட்டாமையால், பகலில் வாராதே. இரவில் வருக! என்றும், இரவில் வாராதே, பகலில் வருக!' என்றும் மாறிமாறிக் கூறுகின்றனர்.