பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 இ. புலவர் கர். கோவிந்தன்

தோழியின் தோற்றுவாயே அப் பெண்ணின் உள்ளத்தை ஒருவாறு அசைத்துவிட்டது. இவ்வாறு அவள் அழகைப் பாராட்டிய தோழி, அவளை நோக்கி, "அன்புடையாய்! சில நாட்களாகவே நின்பால் ஒரு செய்தி கூற வேண்டும் எனும் எண்ணம் உடையேன். அதை இன்று கூறுகின்றேன், கேள்,” எனத் தொடங்கிப் பின் வருமாறு கூறினாள்:

"ஓர் இளைஞன், நல்ல அழகுடைய ஆண்டகை, தலையில் மாலையும், கையில் வில்லும் உடையனாய் நம் தினைப்புனம் நோக்கி வருகிறான். அவனைப் பார்த்தால் காட்டு விலங்குகளை வேட்டையாட வந்தவன்போல் தோன்றுகிறது. ஆனால் அவன் செயலை ஊன்றி நோக்கி னால் அவ்வாறு கொள்வதற்கில்லை. நாள்தோறும் நான் வரும் வழியில் என்னையே எதிர்நோக்கி யிருப்பான் போல் நிற்பன். நான் ஆங்கு வந்ததும் என்னையே உற்று நோக்குவன். அவ்வாறு அவன் என்னைப் பார்க்கும் பார்வை என்பால் எதையோ பெற வேண்டும் என்ற வேட்கையுடையன் என்பதை உணர்த்தும். ஆனால், அவனோ, அதைக் குறிப்பால் உணர்த்துவதல்லாது, வாய் திறந்து கூறுவதிலன். இவ்வாறு சில நாழிகை இருந்துவிட்டு, வறிதே சென்று விடுவன்; இது ஒருநாள் மட்டும் நிகழ்ந்தது அன்று. பல நாளாக நடைபெறுகிறது. அவனை யான் இதற்கு முன் பார்த்ததும் இல்லை. ஆயினும், அவன்பால் எனக்கும் அன்பு உண்டாகி விட்டது. அவன் துயர்நிலை என்னையும் துன்புறுத்திற்று. அதனால் துயிலும் கொள்ள மாட்டாது துயர் உற்றேன் யானும். அவனோ, தன் குறையினை வாய் திறந்து கூற மாட்டேன் என்கிறான்;