பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி ↔ #67

நிறுத்தியவன், முதற்கண், காணும் ஆடவரைக் காதல் கொள்ளத் தூண்டும் மான்போலும் விழிமுதலாம் அவள் உடல் உறுப்புக்களின் நலனைப் பாராட்டினான். பின்னர், அவளை நோக்கி, "அழகிய தோகையினை யுடைய அன்னம் போலும் நடையும், பெடையினைக் கண்டு பெருமிதங் கொள்ளும் மயில்போலும் சாயலும், கற்களைப் பொறுக்கி உண்பனவாய புறாப்போலும் மடப்பமும் ஒருங்கே பெற்று விளங்கும் நின் பேரெழில், நின்னைக் காண்பவர் அறிவினை மயக்கும் என்பதை அறிவாயோ? அறியாயோ?” என்றும், "உருவாலும், நிறத்தாலும் மூங்கில் போன்றும், காமக் கடலைக் கடப் பார்க்குத் துணை புரிதலான், கடல் நீரைக் கடக்க உதவும் தெப்பம் போன்றும், காட்சி தரும், அழகிய, பருத்த, மெல்லிய நின் தோள்கள், கண்டார் உள்ளத்தைக் கடுந் துயர்க்குள்ளாக்கும் என்பதை அறிவாயோ? அறியாயோ?” என்றும், "கோங்கின் பேரரும்பு போலவும், அடி பருத்துத் தோன்றும் தென்னையின் முற்றாத இளநீர்க் குரும்பை போலவும், மழைத் துளி வீழ்தலால் நீரிடை உண்டாம் மொக்குள் போலவும் காட்சி தரும் நின் கொங்கைகள், கண்டார் உயிரை வாங்கும் என்பதை அறிதியோ?

அறியாயோ?” என்றும் பலப்பல கூறிப் பாராட்டினான்.

அவன் அவ்வாறு பலப்பல கூறவும், அவள், அவன் கூறிய எதையும் கேளாதாள் போலவும், அவனைக் கண்டு, அவன் அடையும் பெருந்துயரை அறியாதாள் போலவும், அவனுக்கு விடையேதும் அளியாதும், ஆங்குச் சிறிது போது நிற்பதும் செய்யாதும் செல்லத் தொடங்கினாள்.