பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 இ. புலவர் கா. கோவிந்தன்

பொருள் அளிப்பன்! எனக் கூறுகின்றனளே. என்னே இவள் பேதைமை!" எனத் தனக்குள்ளே எண்ணியவனாய்ப் "பெண்ணே! பிறர்பாற் சென்று, பல்லைக் காட்டி நின்று, பொருளிரக்கும் வறுமையில் உழல்பவன் அல்லன் நான்; உலகமே வந்து இரப்பினும், அவர் விரும்பின எல்லாம் வாரி வழங்கவல்ல பெரு வாழ்வுடையேன். ஆகவே, பொருள் வேண்டி வந்திலன் நான். நான் வேண்டி வந்ததை அளிக்க வல்லவன் நின் தந்தையல்லன். அதை அளிக்கவல்லவள், இதோ நிற்கும் இவள். காதல் உணர்வு உள்ளத்தைக் கலக்க, மருண்டு மருண்டு நோக்கி நிற்கும் இவள் அருளை-அன்பை வேண்டி நிற்கின்றேன் நான். இவள் என்மீது அருள் கொண்டு, என்னை ஆட்கொள்ளு தல் வேண்டும். அதுவே யான் இரக்கும் பொருள்!” என்று தன் உள்ள வேட்கையை வெள்ளென உணர்த்தினான்.

அவன் கருத்து அதுவே என்பதைத் தோழி, அவனைக் கண்ட அப்போதே அறிவாள் எனினும், அதை அவன் தன் வாயால் விளங்க உரைத்தல் வேண்டும், அதுவும், இவள் முன்னிலையில் எனும் எண்ணத்தால், இதுகாறும் ஏதேதோ கூறி வந்தவள், மீண்டும், அவர் களவொழுக்கத்தை அறியாதாள் போன்றே நடித்து, இறுதியாக, "அன்ப! இதுவோ நின்குறை? நன்று நன்று நின் கூற்று! பேராற்றல் காட்டி வந்தெதிர்க்கும் பகைவர் பெரும் படையைப் பாழ் செய்து வெல்லவல்ல பேராண்மை மிக்க யானை போலும் ஒர் ஆண்மகனை, அருள் செய்து ஆட்கொள்ள வேண்டுவாள் ஒரு பெண்ணோ? இதுவோ நின் நிலை?” எனக் கூறிப் பழித்த வாய்ப்பாட்டால், அவன் ஆண்மைச் சிறப்பையும்,