பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 புலவர் கா. கோவிந்தன்

விடத்தின் நீங்கிப் போக மறுக்கும் மனவுறுதி உடையன் ஆதலை அறிவித்துப் "பெண்னே! இனி, அவனிடத்தி னின்றும் தப்பிப் பிழைத்தல் நம்மால் இயலாது. இதற்கு நாம் செய்யக்கூடியது யாது என்பதையே நீயே ஆராய்ந்து கூறு,” என அவளைக் கேட்டாள். அவள் அதற்கு யாதும் விடையளியாதே வாய்மூடி வாளா இருந்தாள். வாய் திறவாது நிற்கும் அவள் நிலை, தன் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டாள் என்பதை உறுதி செய்வதாகக் கொண்டாள் தோழி. அதனால், அவளை நோக்கித், "தோழி! உன்னைப் பெறமாட்டாமையால் உள்ளத்துயர் மிக்கு உழலும் அவ்விளைஞனை அடைந்து, அவனுக்கு இன்பம் தந்து, நீயும் இன்பம் அடைதலை யானும் விரும்பு கின்றேன். அவனை அடையும் ஆசையால் அவன்பால் நீயே வலிதின் வந்ததாக அவன் கருதாவண்ணம், உன்னைப் பலகால் வருந்தி அழைத்துக் சென்று அவன்பால் நானே கொண்டு விட்டதாக அவன் கருது மாறு ஆவன செய்து விடுவன். ஆகவே, அவன்பால் செல்வதை நீ நாணற்க. கரும்பு முதலாம் ஒவியங்களைத் தோளில் வரைதற்கு வேண்டும் தொய்யிற் குழம்பு கொணரச் செல்வாளைப்போல் நான் சென்று விடு கிறேன். நீ, "என்னைத் தனியே இருந்து தவிக்க விடுத்து, இங்கே வந்து தங்கிவிட்டனையோ? தோழி!” எனக் கூறிக் கொண்டே என்னைத் தேடி வருவாள்போல், அவன் நிற்கும் அக்குறியிடத்திற்குச் சென்று சேர்வாயாக ஆங்கு நின்னைக் கண்ட அவ்வளவே, தன் காதல் நோய் தீர்க்கும் கைகண்ட மருந்து நீயே ஆதல் அறிந்து, அவன் நின்காலில் வீழ்ந்து, தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிப் பணிவன்!" என்று கூறினாள்.