பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 இ. புலவர் கா. கோவிந்தன்

பகலில் வந்து பயனில்லை ஆதலின், இரவிலேயே வருதல் வேண்டும். அவ்வழியோ, இரவில் வருவதற்கு மிகக் கொடுமை உடையது. காட்டு விலங்குகளும், மலைப் பாம்புகளும் மண்டிக் கிடக்கும். காட்டாறுகள் குறுக்கிடும். வழியில் வாழும் கானவர், கொலைத் தொழில் நாணாக் கொடியவர். இவற்றால் வழியில் அவனுக்கு ஏதம் உண்டாதலும் கூடும். அந்த நினைப்பு அவளைப் பெருந்துயர்க்கு உள்ளாக்கும்.

இவ்வாறு, அவன் வாராதபோது, அவனைக் காணாமையாலும், வரின், அவன் வரும் வழியின் கொடுமையை நினைப்பதாலும் அவள் வருந்துவள். ஆனால் அவ்வருத்தமெல்லாம் அவனைக் கண்டவுடனே, பகலைக் கண்ட இருளே போல் பறந்தோடி விடும். ஆனால், அவன் அவளைப் பிரிந்தவுடனே, ஒளிமங்கிய அந்நிலையே விரைந்து வந்து சேரும் இருளேபோல், பிரிவுத் துயரம் அவளைப் பற்றிக் கொள்ளும். ஆனால், அப் பெண்ணின் இத் துயர் நிலை எதையும் அவன் அறியான்.

அவன் வந்தக்கால், அவனைக் கண்டதால் உண்டான மகிழ்ச்சி மிகுதியால், தன் துயரை மறந்து விடுவளாதலின், அவள் தன் துயரை அவன்பால் உரைப் பதிலள். ஆதலாலும் அவன் வருகையால் அவள் கவலை அகல, அவள் உடல் தளர்ச்சி நீங்கிக் கவின் பெற்றுவிடு மாதலின், அவள் உடல் தளர்ச்சியினைக் காணும் வாய்ப்பு அவனுக்கு வாய்த்திலதாதலாலும், அவன், அவள் துயர் அறியானாயினன். அதனால், அவன் இவ்வாறு களவில் வந்து அளவளாவிச் செல்வதையே விரும்பினன்.