பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ஒ. புலவர் கா. கோவிந்தன்

மீண்டும் அவனை நோக்கி, "ஐயா! நீங்கள் இருவரும் நிலைத்த இன்பம் பெற்று, நெடிது வாழ வழி செய்யும் என்சொல், இப்போது நீ பெறுகின்ற இக்களவொழுக்க இன்பத்திற்குத் தடையாக இருப்பதால், நினக்குத் துன்பம் தரும் சொல்லாகத்தோன்றும்; நல்லோர் கூறும் அறிவுரை இன்பமே பயக்கும் என்பதை எவரும் முதலில் உணருவதில்லை. அவ் விதிக்கு நீ மட்டும் விலக்காகுவை கொல்? மேலும் நின் நாட்டு இயற்கைப் பொருள்களின் இயல்பு நின்மாட்டும் காணப்பெறுவதில் வியப்பில்லை யன்றோ? நிறையப் பூத்து நிற்பதால் புலிபோலத் தோன்றும், நறுமணம் நாறும் வேங்கை மரத்தைக் கொடுமை செய்யும் புலியெனப் பிறழக் கருதிச் சினம் கொண்டு, அதன் அடியைக் குத்தி, அவ்வாறு குத்தியதால் ஆழப் புதைந்து போன தன் கோடுகளைப் பிடுங்க மாட்டாது, இமயத்தையே வில்லாக வளைத்தோனும், கங்கை பாய்வதால் ஈரம் பொருந்திய சடை உடையோனு மாய சிவன், உமையோடு கூடியிருந்த கைலை மலையைக் கையால் பெயர்த்தெடுக்கக் கருதித் தொடி விளங்கும் தன் கையை அம்மலைக் கீழ் நுழைத்துப் பின்னர் அக்கையை எடுக்க மட்டாது வருந்திய இராவணனைப் போல், மலைப் பிளப்புகளெல்லாம் எதிரொலிக்குமாறு பெருங் குரலெடுத்துக் கூவிக்கூவி அரற்றும் யானைகளை நிறையக் கொண்டதன்றோ நின் நாடு. இனிய வேங்கையைக் கொடிய புலியெனக் கருதும் நின் நாட்டு யானையின் குணம், நின்பால் இருப்பதாலன்றோ, நிறைந்த இன்பம் தரும் மணத்தினை மேற்கொள்க என யான் கூறுவதைக் கொடுமை உரைப்பதாகக் கருதித் துயர் உறுகின்றனை!" என்ானள்.