பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 . குறிஞ்சிமலர் விழித்துப் படித்துக் கொண்டிருப்பார். அப்பாவின் பழக்கமே வீட்டில் எல்லோருக்கும் அமைந்து விட்டது.

பூரணி அடுப்பு மூட்டி இட்லிக் கொப்பரையை வைத்தாள். அந்த வீட்டில் ஒவ்வொரு நினைவிலும் ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு மூலையிலும் மறந்து விடாமல், மறைத்து விடாமல், அப்பாவின் ஞாபகம் இருந்தது. பழக்கத்தில் உறைந்து விட்ட உயிரின் உறவான நினைவுகளை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? மனிதர்களைப் போல் அவர்களைப் பற்றிய நினைவுகளுமா விரைவில் அழிகின்றன? அப்படி அழியுமானால் பின்பு இந்த உலகத்தில் என்ன இருக்கிறது?

காலம் எதைத்தான் அழிக்காமல் நிலைக்க விடப் போகிறது? நிற்காமல் ஒடுகிற சூரியனும், அவனைத் துரத்திக் கொண்டு ஒவ்வொன்றாய் பின் தொடரும் நாட்களும் உலகில் எதையோ ஒடி ஒடித் தேய்த்துக் கொண்டிருக்கின்றனவே! அல்லது தேய்ந்து கொண்டிருக்கின்றனவே!

ஒரு தட்டில் நாலைந்து இட்டிலிகளை எடுத்துக் கொண்டு போய்ச் சின்னத்தம்பி சம்பந்தனுக்கு அவன் படுத்துக் கொண்டிருந்த இடத்திலேயே எழுந்து உட்கார்ந்து சாப்பிடுமாறு கொடுத்துவிட்டு வந்தாள் பூரணி. திருநாவுக்கரசையும், குழந்தை மங்கையர்க்கரசியையும் கூப்பிட்டுச் சமையலறையில் தனக்குப் பக்கத்தில் உட்காரச்செய்து கொண்டு பரிமாறினாள். அவ்வளவு இளமையில் தாயின் முதிர்ச்சியும், அன்பின் கனிவும் அவள் எவ்வாறு தான் பெற்றாளோ? பெரிய மீன்கள் தம் குஞ்சுகளைக் கண் பார்வையிலேயே வளர்த்துப் பழக்கிப் பெரிதாக்குமாம். பூரணி தன் தம்பிகளையும் தங்கையையும், அன்பாலும் கனிவாலுமே வளர்த்தாள். கூடியவரை வீட்டையும், தன்னையும் தேடி வரும் துன்பங்களை அவர்கள் தெரிந்து கொள்ள விடுவதில்லை. அவள் மூத்த தம்பி திருநாவுக்கரசு தான் நினைவு தெரிந்த விவரமுள்ள பையன். அவனிடம் கூட வீட்டுத் துன்பங்களைச் சொல்ல விரும்புவதில்லை அவள்.

வீட்டுக்காரரிடம் ஒப்புக்கொண்டு வந்துவிட்டபடி மாத முடிவுக்குள் இந்த வீட்டைக் காலி செய்து கொடுத்தாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/46&oldid=555770" இலிருந்து மீள்விக்கப்பட்டது