பக்கம்:குற்றால வளம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

91

 பட்ட வகுப்பானது பிறப்புப் பற்றியதாக நீண்ட காலமாக நாளடைவில் மாறிவந்து விட்டது. வள்ளுவர் காலத்திற்கு முன்பே பிறப்புப்பற்றி வகுப்புப் பேசப்பட்டு வந்திருக்குமெனத் தெரிகிறது. அதனாலேயே அக்கொள்கையை அப்பெருமான் கண்டித்துள்ளார். அப்பொருளற்ற கொள்கையால் நாட்டில் பல பூசல்கள் விளைகின்றன. பன்னெடு நாட்பழகிய பழக்கத்தால் இது சட்டென்று விட்டகல்கின்றதில்லை. பிறப்புப்பற்றி வகுப்புக் கூடாதென்று கூறுவோருங்கூடப் பிறப்புப் பற்றி வகுப்புரிமை பாராட்டிக் கொள்வதை மறக்கின்றாரில்லை பழக்கத்தால். ஒவ்வொருவரும் நான் பெரிய வகுப்பு சிறிய வகுப்பு எனச் சண்டையிட்டுக் கொள்கிறார், பறையர்களுள்ளும் பாகுபாடு பாராட்டி உயர்வு தாழ்வு கற்பிக்கிறார். குறவர் மற்றவர்க்கெல்லாம். தாழ்ந்தவரென்றும் பறையருக்கு உயர்ந்தவரென்றும் கூறிக்கொள்கிறார். குறவருக்கு வண்ணார் உயர்ந்தவரென்று வழுத்திக்கொள்கிறார். அவருக்கு இன்னொருவர் உயர்ந்தவ ரென்று இயம்புகிறார். ஒருவருக்கொருவர் பாகுபாடின்றி ஒத்த தன்மையோடு இத்துணைப் பல ஜாதிகளுள் இரண்டு ஜாதி கூட இரா போலும் எப்பொழுது பிறப்புப் பற்றி மற்றொருவரைத் தங்கட்குத் தாழ்ந்தவரெனச் சாற்றுகின்றனரோ அப்பொழுதே தாங்கள் இன்னொருவருக்குத் தாழ்ந்தவர் என நிச்சயமாக ஒப்புக்கொள்ள வேண்டியவர் ஆகிவிடுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/100&oldid=1321674" இலிருந்து மீள்விக்கப்பட்டது