பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லேவன் ஹூக்

7

நாயகத் தொழிலாளர் கட்சியின் கூட்டம் லண்டனில் கூடியது. இக்கூட்டத்தில் இக்கட்சி, தொழிலாளர்களின் போல்ஷவிக் கட்சி ( Bolsheviks) என்றும், நடுத்தர வர்க்கத்தினரின் மென்ஷவிக் கட்சி (Men sheviks ) என்றும் இரண்டாக உடைந்தது. லெனின் போல்ஷவிக் கட்சியின் தலைவரானார்.

1905-ல் நடந்த ரஷ்ய - ஜப்பான் போரில் ரஷ்யா தோற்றது. அரசு மீது தொழிலாளர்களும், குடியானவர்களும் வெறுப்படைந்தனர். லெனின் மாறுவேடத்தில் ரஷ்யாவிற்கு வந்து மக்களைப் புரட்சி செய்யத் தூண்டினார். ஆனால் புரட்சியை அரசு அடக்கிவிட்டது. 1907-ல் லெனின் சுவிட்ஸர்லாந்துக்குத் தப்பிச் சென்று, அங்கிருந்தே ரஷ்யாவில் அரசியல் கிளர்ச்சிகளை நடத்தி வந்தார்.

முதல் உலக யுத்தம் 1914-ல் தொடங்கியது. 1917 பிப்ரவரியில் ஜெர்மனியுடன் ரஷ்யா போரிட்டுக்கொண்டிருந்தபோது, சில நகரங்களில் புரட்சி மூண்டது. அவ்வாண்டு ஏப்ரலில் லெனின் ரஷ்யாவுக்கு வந்தார். ஆட்சியைக் கைப்பற்ற முயன்று, தோற்று, மீண்டும் தலை மறைவானார். எனினும் நான்கு மாதங்களில் அவருடைய கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. ரஷ்யாவின் புதிய அரசாங்கத்திற்கு லெனின் தலைவரானார். இதுவே உலகில் தோன்றிய முதலாவது பொதுவுடைமை அரசாங்கமாகும்.

ரஷ்யாவில் பொதுவுடைமைத் திட்டங்களை நிறைவேற்றுவதில் லெனின் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். 1918-ல் இவரைக்கொல்ல நடந்த முயற்சியிலிருந்து உயிர் தப்பினார். எனினும் கடுமையான உழைப்பினால் இவர் உடல் நலிந்தது. 1924 ஜனவரி 21-ல் இவர் இறந்தார். இவருடைய உடல் தைலமூட்டப்பட்டு மாஸ்க்கோவில் ஒரு அழகான கண்ணாடி அறையில் அனைவரும் பார்க்கக்கூடிய முறையில் வைக்கப்பெற்றது. இன்றும் அது அழியாமல் உள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்கு நகரம் இவரது நினைவாக 'லெனின்கிராடு' என இன்று அழைக்கப்படுகிறது.


லேவன்ஹூக் (Leeuwenhoek, 1632 - 1723) : நோய்க்கிருமிகளில் ஒரு வகை பாக்ட்டீரியங்கள் (த.க.) ஆகும். இவை கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு மிக நுண்ணியவை. இவற்றைத் தாமே அமைத்த மைக்ராஸ்கோப்பின் (த.க.) உதவியால் முதன்முதலாகக் கண்டு, அவற்றின் வடிவங்களை வரைந்து காட்டியவர் லேவன்ஹூக். இவர் ஒரு டச்சு விஞ்ஞானி.


லேவன்ஹூக்

நெதர்லாந்து நாட்டில் டெல்ப்ட் (Delft) என்னும் நகரில் லேவன் ஹூக் பிறந்தார். அங்குக் கடையொன்றில் பணியாளாக வேலை பார்த்தார். ஓய்வு நேரத்தில் இவர் மைக்ராஸ்கோப்புகளை அமைப்பதில் ஆர்வங்கொண்டார். இவர் அமைத்த மைக்ராஸ்கோப்புகள் எல்லாமே ஒரே லென்ஸைக் கொண்ட சாதாரண மைக்ராஸ்கோப்புகள் தாம். மழைத்துளியை இவர் மைக்ராஸ்கோப்பில் பரிசோதனை செய்தபோது, ஒரே உயிரணுவாலான பாக்ட்டீரியங்கள் மழைநீரில் இருப்பதைக் கண்டு வியந்தார். பின்னர், இவர் தொடர்ந்து ஆராய்ந்து ஈஸ்ட்டு உயிரணுக்கள், இரத்த உயிரணுக்கள், தசைநார் முதலியவற்றின் அமைப்புகளை மைக்ராஸ்கோப்பில் கண்டு, அவற்றின் வடிவங்களை வரைந்தார். இக்கண்டுபிடிப்பே, நோய்க்குக் காரணமாக இருக்கும் கிருமிகளை மருத்துவர்கள் பின்னர் ஆராய்ந்தறிய வழிகாட்டியது.

இவரது மைக்ராஸ்கோப் மிகவும் எளிய தோற்றமுடையது. இரண்டு உலோகத் தகடுகளுக்கிடையே லென்ஸ் ஒன்றை இவர் பொருத்தியிருந்தார். தகட்டிலுள்ள ஒரு துளையின் வழியாக லென்ஸைக் கண்ணருகே வைத்துப் பார்க்கலாம். லென்ஸின் மறுபுறம் பரிசோதனைக்குரிய பொருளை இடுக்கி போன்ற முள் பற்றிக்கொண்டிருக்கும்; சோதனை செய்யவேண்டிய பொருள் திரவமாக இருந்தால் அது கண்ணாடித் தட்டில் வைக்கப்பட்டிருக்கும். எளியதாகத் தாமே அமைத்துக்கொண்ட இக்கருவியைப் பயன்படுத்தியே பெரிய உண்மைகளை ஆராய்ந்தறிந்தவர் இவர்.