பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒலியை உணரவும் பயன்படுகின்றன. தேனை உறிஞ்சிக் குடிப்பதற்கென்று இதன் வாயில் குழல் போன்ற உறுப்பு உள்ளது. இதற்கு உறிஞ்சுகுழல் என்று பெயர். மலரில் அமர்ந்து இக் குழலை நீட்டித் தேனை உறிஞ்சிக் குடிக்கும். மற்ற நேரங்களில் இதைச் சுருட்டிவைத்துக்கொள்ளும். வண்ணத்துப்பூச்சிக்குத் தலையில் இரண்டு கண்கள் உண்டு. இவை ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான சிறிய கண்கள் சேர்ந்த கூட்டுக் கண் ஆகும்.

வண்ணத்துப்பூச்சியின் உணவு, பூவில் உள்ள தேன்தான். பூவின் மேல் அமர்ந்து இது தேனைக் குடிக்கும்போது பூவின் மகரந்தத்தூள் இதன் கால்களிலும் உடலிலும் ஒட்டிக்கொள்ளும். பிறகு வேறு ஒரு மலரின் மீது சென்று உட்காரும்போது, ஒட்டிக்கொண்டிருக்கும் மகரந்தத்தூள் அந்தப் பூவில் விழும். இவ்வாறு மலர்களில் மகரந்தச் சேர்க்கை (த.க.) நிகழ்வதற்கு வண்ணத்துப்பூச்சி உதவுகிறது.

வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கையில் நான்கு பருவங்கள் உண்டு. முட்டை, லார்வா அல்லது புழு , பியூப்பா அல்லது கூட்டுப் புழு, முதிர்நிலை ஆகியவை இப்பருவங்கள். புழுவிற்கு உணவு மிகுதியாகக் கிடைக்குமிடம் பார்த்து மரம், செடி இவற்றின் இலைகளின் அடிப் பகுதியில் வண்ணத்துப்பூச்சி முட்டையிடும். முட்டைகள் சிறிதாகவும் அழகான நிறத்தோடும் இருக்கும். சில நாட்கள் கழித்து, முட்டையிலிருந்து புழு வெளி வரும். இது இலைகளை அதிகமாகத் தின்று கொண்டே இருக்கும். அதனால் இது தாவரங்களுக்கு மிகவும் தீங்கு செய்கின்றது. இலை, பூ இவற்றை அரித்து விடும். இது வளரவளர நான்கு அல்லது ஐந்து முறை தோலுரிக்கும். பின்னர் புழுவின் மேல்தோல் ஒரு கூடுபோல் ஆகும். இந்தக் கூட்டுப் பருவம் தான் பியூப்பா. இந்நிலையில் புழு உணவு கொள்ளாமலும் அசையாமலும் உறங்கும். கூட்டினுள் பல மாற்றங்கள் உண்டாகின்றன. இறுதியில் கூட்டைக் கிழித்துக் கொண்டு அழகான வண்ணத்துப்பூச்சி வெளியே வந்து பறக்கிறது. வண்ணத்துப்பூச்சிகளில் ஆயிரக்கணக்கான வகைகள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் ஒரு தனி அழகு உண்டு.


வயலின் : இசைக் கருவிகளில் ஒன்று வயலின். இதை பிடில் என்றும் சொல்வார்கள். இது அயல் நாட்டு இசைக் கருவியாயினும் இன்று இந்திய இசைக்கும் சிறந்த துணைக்கருவியாக விளங்குகிறது. குறிப்பாக, கருநாடக இசைக் (த.க.) கச்சேரிகளில் இதைத் தனியாகவும் துணைக் கருவியாகவும் சிறப்பாகப் பயன்படுத்துகிறார்கள்.

இசைக் கருவிகளில் (த.க.) நான்கு வகையுண்டு. நரம்புக் கருவிகள் அவற்றில் ஒருவகை. வயலின் நரம்புக் கருவியாகும். இதில் நான்கு நரம்புகள் (அல்லது உலோகக் கம்பிகள்) இருக்கும். இவற்றை ஒரு வில்லைக்கொண்டு இசையெழுப்பு வார்கள். வலது கையால் வில்லை நரம்புகள் மீது மீட்டி ஒலி எழுப்புவார்கள். இடது கைவிரல்களில் கட்டைவிரல் தவிர ஏனைய நான்கு விரல்களையும் கொண்டு வெவ்வேறு சுரங்களை இசைப்பார்கள். வில்லைக் கொண்டு இசைப்பதால் இதில் இடைவெளியின்றித் தொடர்ச்சியாக ஒலி உண்டாக்க முடியும்.

வில் சுமார் 70 சென்டிமீட்டர் நீளமுள்ளது. இது உறுதியாகவும், சற்றே வளைந்தும் இருக்கும். இதன் இரு முனைகளையும் சுமார் 150 குதிரை முடிகள் இணைக்கின்றன. ஒரு முனையிலுள்ள திருகைக் கொண்டு குதிரை முடிகளின் இழுவிசையைக் (Tension) கூட்டலாம் அல்லது குறைக்கலாம்.

வயலின் முதன்முதலில் 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டது. பின்னர் இத்தாலியர்கள் இதைத் திருத்தியமைத்துச் சிறப்பாகச் செய்தனர். மேல்நாட்டு இசைக் குழுக்களில் வயலின் முக்கிய இடம் பெறுகிறது. சென்ற நூறு ஆண்டுகளாகத்தான் இந்திய இசைக்கு, சிறப்பாகக் கருநாடக இசைக்கு வயலினைப் பயன்படுத்துகிறார்கள்.

வர்ணங்கள் (Paints) : வீடுகளில், கதவு, சன்னல் போன்றவற்றுக்கு வர்ணம்