பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வர்ணங்கள் - வரலாறு

15

பூசி அழகுபடுத்துகிறோம். மோட்டார் வண்டிகளுக்கும் வேறுபல எந்திரங்களுக்கும் வர்ணம் பூசுகிறார்கள். இவற்றுக்கு அழகு சேர்ப்பதோடு வெயில், மழை முதலியவற்றிலிருந்து இவற்றைப் பாதுகாக்கவும் வர்ணம் பெரிதும் உதவுகிறது. இரும்பு, எஃகு முதலியவற்றாலான பொருள்களில் துருப்பிடிக்காமலிருக்க அவற்றுக்கு அடிக்கடி வர்ணம் பூச வேண்டும். துருப்பிடித்துவிட்டால் அவை அரிக்கப்பட்டுவிடும்.

வர்ணம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்று பார்ப்போம். நிறமூட்டும் சாயப் பொருள்களை (Pigments ) நன்றாகப் பொடியாக்குவார்கள். பின்பு இந்தப் பொடியை ஒருவகைத் திரவத்திலிட்டு அரைப்பார்கள். இந்தத் திரவத்திற்கு கரை திரவம் என்று பெயர். ஆளிவிதை எண்ணெய் முக்கியமான கரைதிரவமாய்ப் பயன்படுகிறது. மேலும் பலவித புதிய கரை திரவங்களை இன்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள். கரிமப் பொருள், இரும்புத் தாதுக்கள், களிமண் வகைகள் முதலியவை இயற்கையில் கிடைக்கும் சாயப்பொருள்கள் ஆகும். செயற்கை முறையிலும் சாயப்பொருள்களைத் தயாரிக்கிறார்கள்.

கரைதிரவத்துடன் சாயப்பொருள்களைக் கலந்து உண்டாக்கும் வர்ணம் முதலில் பிசுபிசுப்பாக இருக்கும். இந்நிலையில் வர்ணத்தைப் பூசமுடியாது. எனவே டர்ப்பன்டைன், இரசக் கற்பூரத் தைலம் (Naphtha ), பெட்ரோலியம், ஸ்பிரிட்டு ஆகியவற்றில் ஒன்றைக் கலந்து வர்ணத்தைப் பக்குவப்படுத்துவார்கள். வர்ணம் பூசியதும் அது எளிதில் உலர்வதில்லை; தொட்டால் ஒட்டிக்கொள்ளும். ஆகவே விரைவில் உலர்வதற்காக ஆளி விதை எண்ணெய், டங் எண்ணெய் ( Tung oil) முதலியவற்றைச் சேர்ப்பார்கள்.

ஓவியங்கள் வரைவதற்குப் பலவகை வர்ணங்கள் உள்ளன. நீர்வண்ண ஓவியம் (Water colour painting), நெய்வண்ண ஓவியம் (Oil painting) இரண்டுக்கும் தனி வகை வர்ணங்கள் உண்டு. இன்று ஆடைகளில் வண்ணச் சித்திரம் வரைவதற்குத் தனிவகை வர்ணங்கள் (Fabric paints) உள்ளன. சுவர்களில் பூசுவதற்கென்று பலவகை வர்ணங்கள் உண்டு. ரேடியம் போன்ற கதிரியக்கப் பொருள்களைச் சேர்த்து ஒளிரும் வர்ணங்கள் (Luminous paints) தயாரிக்கப்படுகின்றன. தேக்கு, ஈட்டி போன்ற மரங்களால் செய்யப்படும் மேசை, நாற்காலி போன்றவற்றிற்கு மெருகு எண்ணெய் ( Varnish) பூசுகிறார்கள். இதனால் அவை பளபளப்பாக அழகுடன் விளங்குகின்றன. இந்த மரங்களின் தன்மை கெடாமலும் பாதுகாக்கப்படுகிறது.

மெருகு எண்ணெயும் வர்ணத்தின் ஒரு வகையே. ரெசின் (Resin) போன்ற நீரில் கரையாத பிசின் பொருளை எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெயில் கரைத்து மெருகு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. ஆளிவிதை எண்ணெய், சோயா மொச்சை எண்ணெய் முதலியன எளிதில் ஆவியாகக் கூடியவை. இன்று வர்ணம் தயாரிக்கும் தொழில் பெரிதும் முன்னேறியுள்ளது. இதற்கென்று பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. பார்க்க: சாயம்.


வரலாறு : ஒரு நாட்டை ஆண்ட அரசர்களின் பரம்பரை பற்றியும் அந் நாட்டு மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சி முதலியவை பற்றியும் கூறுவது வரலாறு ஆகும். உலக நாடுகள் ஒவ்வொன்றுக்கும் வரலாறு உண்டு.

அண்மைக்காலம் வரையில் ஒரு நாட்டை ஆண்ட மன்னர்கள், அவர்கள் செய்த போர்கள், கண்ட வெற்றி தோல்விகள் ஆகியவற்றைக் கூறுவதுதான் வரலாறு என்ற எண்ணம் நிலவியது. எனவே, வரலாற்று நூல்களில் அரசர்களைப் பற்றிய செய்திகளே அதிகமாக இடம்பெற்றன. இப்பொழுது வரலாறு பற்றிப் புதிய கருத்துகள் தோன்றியுள்ளன. சமுதாய வரலாற்றில் அரசர்களின் பங்கு மிகச் சிறிதளவு தான்; மக்களின் பங்கே மிகப்பெரிது. அரசர்களுடைய செங்கோன்மை அல்லது கொடுங்கோன்மையின் விளைவாக இன்ப துன்பங்களை அனுபவிப்பவர்கள் நாட்டின் குடிமக்களேயாவர். எனவே, அவர்கள் வாழும் நாட்டின் இயற்கை அமைப்பு, இயற்கை வளங்கள், அவற்றுக்கு ஏற்ப அமைந்துள்ள மக்களின் வாழ்க்கை முறை, சமூகத்தில் காணப்படும் மக்கள் இனப் பிரிவுகள், மொழி, இலக்கியம், கலைகள் ஆகியவற்றின் வளர்ச்சி, பொருள் வளம், அரசியல் முறை, மக்களின் உணவு, ஆடை அணிகள், அவர்களின் பழக்கவழக்கங்கள், சமய நம்பிக்கைகள், சமுதாய நல நிறுவனங்கள் ஆகியவற்றைப்பற்றி ஆராய்ந்து கூறுவதில் இப்பொழுது வரலாற்று அறிஞர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

மக்கள் தங்கள் வாழ்வுக்குத் தேவையான பொருள்களைப் பெறுவதற்கு வேளாண்மை, வாணிகம் போன்ற பல வகைத் தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதைப்பற்றி விளக்கிக் கூறுவது 'பொருளியல் வரலாறு'. உலகில்