பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

16

வரலாறு - வரி

சமயங்கள் பல தோன்றி வளர்ந்து வந்துள்ளன; பல மறைந்தும் போயிருக்கின்றன. மக்களின் சமய வாழ்வு பற்றிக் கூறுவது 'சமய வரலாறு'. நாட்டின் மொழி, இலக்கிய வளர்ச்சியைக் கூறுவது 'இலக்கிய வரலாறு' ஆகும்.

வரலாற்றை ஆராய்வதும் எழுதுவதும் மிகவும் பொறுப்பு வாய்ந்த பணியாகும். விருப்பு வெறுப்புகளுக்கு இடங்கொடுக்காமல், உண்மையை உள்ளவாறே எழுத வேண்டும். வரலாற்றில் கற்பனைக்கு இடமில்லை. ஆதாரங்களை வைத்துக்கொண்டே வரலாற்றுச் செய்திகள் ஒவ்வொன்றையும் கூறுதல் வேண்டும். பண்டைய இலக்கியங்கள், கல்வெட்டுகள், புதைபொருள்கள், பழைய நாணயங்கள், பழங்காலக் கட்டடச் சிதைவுகள், சிற்பங்கள், சமயக் கோட்பாடுகள், வெளிநாட்டார் எழுதியுள்ள குறிப்புகள் ஆகியவை வரலாறு எழுதுவதற்குச் சான்றுகளாகத் துணைபுரிவன.

இந்தியா மிகத் தொன்மையான, சிறப்பான வரலாற்றை உடையது. தமிழகத்தில் இதுவரை வெளியாகியுள்ள கல்வெட்டுச் செய்திகள், தமிழ் இலக்கியங்களில் காணும் வரலாற்றுச் சான்றுகள், பண்டைய கிரீஸ், ரோம், எகிப்து, சீனா ஆகிய நாட்டு வரலாற்று நூல்களில் தமிழரைப்பற்றிக் கிடைக்கும் குறிப்புகள் முதலியவற்றைக் கொண்டு அறிஞர்கள் தமிழக வரலாற்றை எழுதி வருகிறார்கள்.


வரி (Tax) : இக்காலத்தில் அரசாங்கம் மக்களுக்குப் பலவிதமான சேவைகளைச் செய்கிறது. அயல்நாட்டுப் படையெடுப்பிலிருந்து ராணுவம் நம்மைக் காக்கிறது. திருடர்களிடமிருந்தும் குற்றம் செய்பவர்களிடமிருந்தும் காவலர் (Police) நமக்குப் பாதுகாப்பளிக்கிறார்கள். நீதி மன்றங்கள் வழக்குகளைத் தீர்த்து வைக்கின்றன. கல்வி பயிலப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் அரசு நடத்துகிறது. நோய்களைக் குணப்படுத்த மருத்துவமனைகளை நிறுவுகிறது. சாலைகளையும், ரெயில் பாதைகளையும் அமைத்துப் போக்குவரத்து வசதிகளைச் செய்து தருகிறது. அணைகள் கட்டியும், கால்வாய்கள் வெட்டியும், குளங்களைச் செப்பனிட்டும் நீர்ப்பாசன வசதிகளைச் செய்து கொடுக்கிறது. அஞ்சலகங்களை அமைத்துக் கடிதப்போக்குவரத்து ஒழுங்காக நடைபெறச் செய்கிறது. இவற்றையெல்லாம் செய்வதற்கு அரசுக்குப் பணம் தேவை அல்லவா? இந்தப் பணத்தின் ஒரு பகுதியை மக்களிடமிருந்து அரசு பெற்றுக் கொள்கிறது. இதற்கு வரி என்று பெயர்.

மக்களின் பொருளாதார நிலையில் உண்டாக்கும் விளைவுகளைப் பொறுத்து,

இந்தியாவில் சில முக்கிய வரிகள்

வருமான வரி: ஓராண்டில்‌ ஒரு குறிப்பிட்ட தொகைக்குமேல்‌ வருமானம்‌ உடையவர்‌களின்மீது விதிக்கப்படும்‌ வரி. இது ஒரு நேர்முக வரி. மத்திய அரசினால்‌ வசூலிக்கப்படுகிறது.

விற்பனை வரி: அரசு குறிப்பிட்டுள்ள பொருள்களைக்‌ கடைகளில்‌ நாம்‌ வாங்கும்பொழுது அப்பொருள்களின்‌ விற்பனைமீது விதிக்கப்படும்‌ வரி. இது ஒரு மறைமுக வரி, மாநில அரசில்‌ வசூலிக்கப்படுவது.

சொத்து வரி: நிலம்‌, வீடு, மனை இவற்றின்மீது வசூலிக்கப்படும்‌ வரி. இவ்வரியை உள்ளாட்சி நிறுவனங்கள்‌ வசூலிக்கின்றன.

செல்வ வரி; கட்டடங்கள்‌, நிலம்‌, நகைகள்‌, பங்குப்பத்திரங்கள்‌ முதலியவற்றின்‌ மதிப்பின்பேரில்‌ விதிக்கப்படும்‌ வரி, இது மத்திய அரசினால்‌ வசூலிக்கப்படுவது.

சுங்க வரி: வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும்‌ பொருள்கள்மீதும்‌, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும்‌ பொருள்கள்‌ மீதும்‌ விதிக்கப்படும்‌ வரி. இதை மத்திய அரசு வசூலிக்கும்‌.

கலால்‌ வரி: சில குறிப்பிட்ட பொருள்களின்மீது. மாநில அரசோ, மத்திய அரசோ, வசூலிக்கும்‌ வரி.

முத்திரை வரி : சொத்துகளை விற்கும்போதும்‌, வாங்கும்போதும்‌. பத்திரங்களில்‌ பதிவு செய்வதற்கு வாங்கப்படும்‌ வரி.

தொழில்‌ வரி: அரசு அலுவலர்கள்‌, அலுவலக ஊழியர்கள்‌, தொழிலாளர்கள்‌, வணிகர்‌கள்‌. ஆகியோரிடம்‌ வசூலிக்கப்படும்‌ வரி. இவர்கள்‌ எந்த இடத்தில்‌ தொழில்‌. செய்கின்றார்‌களோ, அந்த இடத்திலுள்ள உள்ளாட்சி நிறுவனம்‌ இவ்வரியை வசூலிக்கும்‌.