பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வேதம் - வேப்ப மரம்

ஆசியப் பெண் சிங்கம்

வேட்டையாடுவது முழுவதுமே தடை செய்யப்பட்டுள்ளது. சில புகலிடங்களில் குறிப்பிட்ட வரையறைக்குள் வேட்டை யாட அனுமதிக்கப்படுகிறது.

வேதம்: சமஸ்கிருத மொழியில் தோன்றிய முதல் நூல் வேதம் ஆகும். ஆரியர்களின் சமயக் கொள்கைகள், வேள்வி முறைகள், நிவேதனங்கள் பற்றி யும், உலகத் தோற்றம், உயிர்களின் பிறப்பு ஆகியவை குறித்தும் இது கூறுகின்றது. கடவுள் வேதத்தைப் பிரமனுக்கு உபதேசிக்க, பிரமன் அதை முனிவர் களுக்கும். அம் முனிவர்கள் அதைத் தம் சீடர்களுக்கும் உபதேசித்தனர் என்பர். கி.மு. 2500 முதல் கி.மு. 1500 வரையுள்ள காலத்தில் பல ஞானி களால் வேதம் செய்யப்பட்டதென வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். ஏட்டில் எழுதப்படாமல் பன்னெடுங் காலமாக வாய்மொழியாகவே வழங்கி வந்த வேதத்தை வியாசர் (த.க.) ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு பகுதிகளாகத் தொகுத்தார் என்றும் கூறுவர்.

ரிக் வேதம், உரத்த குரலில் ஒதுவதற்கு ஏற்ற செய்யுள்களை உடையது; இவற்றுள் பெரும்பாலானவை வேதக்கடவுளர்கள் மீதான தோத்திரங்களாகும். யஜுர் வேதம் உரைநடையில் அமைந்தது; வேள்விகளின் போதும், வழிபாடுகளின் போதும் தாழ்ந்த குரலில் ஓதுவதற்கென அமைந்தது. ரிக் வேதத்தில் காணும் இசைப்பாடல்களின் தொகுப்பே சாம் வேதமாகும்; இதில் சோமனின் (சந்திரன்) பெருமை கூறப்பட்டுள்ளது. அதர்வண வேதம், செய்யுளும் உரைநடையும் கலந்தது; நீண்ட நாள் வாழ்வதற்கும், நோய்களைக் குணப்படுத்துவதற்கும், பகைவர்களை வெல்வதற்கும் உரிய மந்திரங்கள் அடங்கியது.

ஒவ்வொருவரும் தம்மை உணர்ந்து எண்ணம், சொல், செயல் இவற்றால் தூய்மையான, நேர்மையான வாழ்க்கை நடத்துவதற்கு வேதங்கள் வழிகாட்டு கின்றன. 'கடவுள் ஒருவர் உண்டு; நீர், நெருப்பு, காற்று யாவும் கடவுளின் உருவங்களேயாகும். இவ்வியற்கைப் பொருள்களை வணங்குவதன் மூலம் கடவுளை வணங்கலாம்' என்று வேதங்கள் வலியுறுத்துகின்றன. வேதங்களில் காணும் சமயக் கருத்துக்களில் பல, இந்து சமயத் தத்துவங்களாக அமைந்துள்ளன.


வேப்ப மரம் : வேப்ப மரத்தைச் சாதாரணமாக நாம் எங்கும் காணலாம். வேம்பு என்றும் இதற்குப் பெயர் உண்டு. ஏரிக் கரைகளிலும் சாலை ஓரங்களிலும் நிழல் தரும் மரங்களாக இவை வளர்க்கப் படுகின்றன. இம்மரம் கசப்புத் தன்மை உடையது. இதன் இலை, காய், விதை முதலியன மிகக் கசப்பானவை. எனினும் இது மிகவும் பயனுள்ள மரங்களுள் ஒன்று. வேப்ப மரத்தில் மலை வேம்பு, சந்தன வேம்பு என வேறு வகைகளும் உண்டு.

வேப்ப மரம் சுமார் 15 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் இலைகள் ரம்பப் பல் வடிவினதாக இருக்கும். இலையை மருந்தாகப் பயன்படுத்துவது உண்டு. இலையை அரைத்து அல்லது காய வைத்துப் பொடியாக்கி உடம்பில் தேய்த் துக் குளிப்பார்கள். கொழுந்து இலையைத் துவையல் செய்து உண்பதுமுண்டு.

வேப்ப மரம் ஆண்டுதோறும் கோடை காலத்தில் பூக்கும். பூக்கள் மிகச் சிறியன; கொத்துக் கொத்தாக இருக்கும். வெண்மை நிறமுள்ள இப் பூவைச் சமைப்பதுமுண்டு. வேப்பம் பூவுக்கு மற்றொரு பெருமையும் உண்டு. இது முற்காலத்தில் பாண்டிய அரசர்களின் சின்னமாக விளங்கியது. பாண்டிய அர சர்கள் போருக்குப் புறப்படும்போது வேப்பம் பூவாலாகிய மாலையை அணி வது வழக்கம்.

காய் பசுமையாக, நீள் உருளை வடிவில் சுமார் இரண்டு சென்டிமீட்டர் நீளமுள்ள தாக இருக்கும். காயைக் கிள்ளினால் வெள்ளை நிறமுள்ள பால் வடியும். காய் முற்றி மஞ்சள் நிறங்கொண்ட பழமாக மாறும். பழம் சதைப்பற்று உள்ளது. இனிப்பாக இருக்கும். பறவைகள் இதை விரும்பி உண்ணும். பழங்களை விழுங்கும் பறவைகள் விதைகளை எச்சத்துடன் வெளியேற்றுவதால் வேப்ப மரங்கள் பல இடங்களிலும் முளைத்து வளர்கின்றன.