பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

99

குளிர்ந்த ஜலமானாலும் கொதிக்கும் ஜலமானாலும் நெருப்பில் பட்டவுடன் ஆவியாக மாறிவிடுகிறது. அந்த ஆவி நெருப்பைச் சூழ்ந்து நின்று நெருப்பு எரிவதற்கு வேண்டிய காற்றை அதன்மீது படாதபடி தடுத்துவிடுகிறது. அதோடு நீராவி எரியக் கூடிய வஸ்துவும் அன்று; அதனால்தான் நெருப்பு அணைந்துபோகிறது.

148 அப்பா! அடுப்பில் எண்ணெய் ஊற்றினால் நெருப்பு நன்றாக எரிகிறதே, காரணம் என்ன?

தம்பி! விறகு நன்றாக எரிந்துகொண்டிருக்கலாம். நன்றாக எரியாமலும் இருக்கலாம். நன்றாக எரியும்பொழுது எண்ணெய் ஊற்றினால், எண்ணெய் ஆவியாக மாறி அதுவும் விறகோடு சேர்ந்து கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்து விடுகிறது. விறகு நன்றாக எரியாதபொழுது அதன் மீது எண்ணெய் ஆவியாக மாறி எரிகிறது. அந்த உஷ்ணத்தால் விறகிலுள்ள ஜலம் ஆவியாக மாறி வெளியே போய் விடுகிறது. அதனால் விறகு நன்றாக எரிய ஆரம்பித்து விடுகிறது.

149 அப்பா! விறகு எரியும்போது சடசட என்று வெடிக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! விறகு என்னவோ ஒரே கட்டியாகத்தான் தெரிகிறது. ஆனால் அதை பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தால், அதில் ஏராளமான சிறு துவாரங்கள் இருப்பதைக் காணலாம். அந்தத் துவாரங்களில் நிறைந்திருக்கும் காற்று உஷ்ணம் உண்டானவுடன் விரியும். அப்படி விரியும் பொழுது அந்தச் சிறு துவாரங்களை உடைக்கும். அப்படி உடைபடுவதனால்தான் சடசட என்ற சப்தம் கேட்கின்றது.

150 அப்பா! அடுப்பின்மீது மூன்று உருண்டைகள் இருக்கின்றனவே அதற்குக் காரணம் என்ன?

தம்பி! அடுப்பில் விறகு எரிகிறது. அதாவது காற்றிலுள்ள பிராணவாயுவோடு சேர்ந்து கரியமில வாயு