பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

கேள்வியும்

முதலிய வாயுக்களாக மாறுகிறது. எரிவதற்கு வேண்டிய காற்று அடுப்பின் வாய் வழியாக உள்ளே செல்லுகிறது. எரியும் பொழுது உண்டாகும் வாயுக்கள் அடுப்பின் மேற்புறம் வழியாக வெளியே செல்கின்றன. அப்படி விறகு எரியும் பொழுது அடுப்பின் மீது பானையை வைத்தால் விறகு எரியாமல் புகைந்து அணைந்து போகிறது. அதற்குக் காரணம் என்ன? எரியும்பொழுது உண்டாகும் வாயுக்கள் வெளியே போகாதபடி பானை தடுத்துவிடுகிறது. அந்த வாயுக்கள் அடுப்பினுள்ளேயே தங்கி விடுகின்றன. அதனால் காற்று உள்ளே செல்லாமல் இருந்து விடுகிறது. காற்று இல்லாமல் விறகு எரியாதல்லவா? ஆதலால் எரியும் பொழுது உண்டாகும் வாயுக்கள் வெளியே போவதற்கு வழி செய்யவேண்டும். அதற்காகத்தான் அடுப்பின் மீது மூன்று உருண்டைகளை வைத்து, அவற்றின் மீது பானையை வைக்கிறார்கள். அதனால் எரியும்பொழுது உண்டாகும் வாயுக்கள் பானைக்கு அடியில் வெளியே போக இடம் உண்டாகிறது. அப்பொழுது காற்று அடுப்பின் வாய் வழியாகத் தாராளமாக வந்து விறகை நன்றாக எரியும்படி செய்கிறது.

151 அப்பா! விறகடுப்பில் விறகு கொழுந்துவிட்டு எரிகிறது, கரியடுப்பில் கரி கொழுந்துவிட்டு எரியவில்லையே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! எரிவது என்பதற்குப் பிராண வாயுவோடு சேர்வது என்பது பொருளாகும். அவ்விதம் எரியும் வஸ்துக்களில் சில வாயு ரூபமாக இருக்கும். வாயு ரூபமாக இருக்கும் வஸ்துக்கள் பிராண வாயுவோடு சேர்ந்து எரியும் பொழுதுதான் சுடராக எரியும். மற்ற வஸ்துக்கள் எரியும் பொழுது சுடர் உண்டாவதில்லை. விறகு எரியும்பொழுது அதிலுள்ள கரி எரிவதோடு, வேறு சில வாயுக்களும் வெளிப்பட்டு எரிகின்றன, அதனால்