பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

கேள்வியும்

இரவு நேரம் என்று கூறுகிறோம். அந்த இரவு நேரத்தில் சூரியன் நமக்குத் தெரியாவிட்டாலும் பூமியின் அடுத்த பாகத்தில் உள்ளவர்களுக்குத் தெரியவே செய்யும். இவ் விதமாகத் தினந்தோறும் மாறி மாறி வரும்; நமக்குத் தெரியும்போது அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரியும்போது நமக்குத் தெரியாது அவ்வளவுதான் சூரியன்மட்டும் இருந்த இடத்திலேயே இருந்துகொண்டிருக்கிறது.

11 அப்பா! சூரியன் உதயமாகும் பொழுதும் அஸ்தமனமாகும் பொழுதும் நடுப் பகலில்போல் வட்டமாகவும் வெண்மையாகவும் தோன்றாமல் முட்டையாகவும் சிவப்பாகவும் தெரிகிறதே அதற்குக் காரணம் என்ன?

தம்பி! ஒளியானது ஒரே விதமாகவுள்ள வஸ்து வழியாகச் செல்லும்பொழுது நேராகச் செல்லும். அப்படி நேராகச் செல்லும் ஒளி அந்த வஸ்துவை விட்டு வேறு வஸ்துவுக்குள் பிரவேசிக்கும் பொழுது சிறிது சாய்ந்து, அதன்பின் அந்த இரண்டாவது வஸ்து வழியாக நேராகச் செல்லும். மூன்றாவது விதமான வஸ்து ஒன்றைச் சந்தித்தால் அப்பொழுதும் சிறிது சாய்ந்து அந்தப் புது வஸ்து வழியாக நேராகச்செல்லும். ஒளிக்குள்ள இந்த குணத்தை சாய்ந்து செல்லல்' என்று கூறுவார்கள்.

சூரியன் உச்சிலிருக்கும்பொழுது அதன் ஒளி காற்றின் வழியாக அதிகத்துாரம் வரவேண்டியதில்லை. ஆனால் உதயத்திலும் அஸ்தமனத்திலும் அதிகதுாரம் வரவேண்டியிருக்கிறது. அதனால் ஒளி நடுப்பகலில் சாய்வதைவிடக் காலையிலும் மாலையிலும் அதிகமாகச் சாய்ந்து வருகிறது. ஆதலால்தான் சூரியன் காலையிலும் மாலையிலும் முட்டை வடிவமாகத்தெரிகிறது.