பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

19

பார்வை அதிகக் கூர்மையாக இருந்தால் இரண்டாயிரம் வரை எண்ணலாம். ஆனால் மிகச் சிறிய தூரதிருஷ்டிக் கண்ணாடிகூட லட்சத்து இருபதாயிரம் வரைக் காட்டும். பெரிய கண்ணாடியாயிருந்தால் அதிகமாக எண்ணலாம். ஆனால் கண்கள் சீக்கிரத்தில் களைத்து போகின்றன. அதனால் இப்போது தூரதிருஷ்டிக் கண்ணாடி மூலமாக வானத்தைப் படம் பிடித்து அதிலிருந்து நட்சத்திரங்களை எண்ணுகிறார்கள். அமெரிக்காவிலுள்ள வில்ஸன் மலை மீதுள்ள தூரதிருஷ்டிக் கண்ணாடிதான் மிகப்பெரியதாகும். அதன் குறுக்களவு 100 அங்குலமாகும். அந்தக் கண்ணாடி மூலம் படம் பிடித்தால் 150 கோடி நட்சத்திரங்கள் காணலாமாம். ஆயினும் நட்சத்திரங்கள் அதற்கு அதிகமாக இருக்கும் என்றே அறிஞர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள்.

27 அப்பா! நட்சத்திரங்கள் மின்னுகின்றனவே, அவை எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன?

தம்பி! பூமியின் மீதுள்ள பொருள்களின் தூரத்தைத் தான் நாம் சங்கிலி கொண்டு அளந்து கூறமுடியும். பூமிக்கு மேலே வெகு துாரத்திலுள்ள சந்திர சூரியர்களையும் நட்சத்திரங்களையும் இவ்வளவு தூரத்தில் உள என்று எப்படி அளந்து கூறமுடியும்? ஒளியானது ஒரு ஸெக்கண்டு நேரத்தில் எவ்வளவு தூரம் செல்லும்? 1,86,500 மைல்கள் என்று அறிஞர்கள் கண்டு பிடித்திருக்கிருள்கள். அப்படியானால் சூரியனிலிருந்து ஒளியானது பூமிக்கு வந்து சேர 8 நிமிஷங்கள் செல்லுமாம். அது போல நட்சத்திரங்களின் ஒளி வந்துசேர எவ்வளவு காலமாகும்? நட்சத்திரங்கள் மொத்தம் 160கோடி இருக்கும் என்று கெல்வின் பிரபு கணித சாஸ்திர மூலம் கண்டுபிடித்தார். ஆனால் அப்படி மூன்று மடங்கு இருக்கும் என்று வான சாஸ்திரிகள் எண்ணுகிறார்கள். அவைகளில் எல்லாம் நமக்கு வெகு சமீபத்தில் உள்ள நட்சத்திரம் ஆல்பாஸெண்டாரி என்று கூறுவார்கள்.