பக்கம்:குழந்தை உலகம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாலாட்டு

3


குளிர்விக்கும் அமுதகானம். அவன் பாட்டில், நம்முடைய ஸ்வராவளி ஆராய்ச்சியையும் லய சோதனையையும் கொண்டு வரக்கூடாது. அவன் பாட்டுக்கு அதுவே இலக்கணம்; பாம்பு மயங்குவது பயன். வண்டிக்காரன் ராத்திரி முழுவதும் சாலை வழியே வண்டியை ஒட்டிக் கொண்டு போகிறான். அழகான தெம்மாங்கை உச்சஸ்தாயி யிலே பாடிக்கொண்டு போகிறான் வண்டியும் மாடும் மறந்துபோகின்றன. சவுக்கைத் தொடுவதேயில்லை. மாடுகள் மெல்ல அசைந்து அசைந்து செல்லுகின்றன. இயற்கையே தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அந்த நள்ளிருளில் அவனது இசையைக் கேட்க யார் இருக்கிறார்கள் ? வண்டியிலே பூட்டியிருக்கும் காளைகளல்லவா கேட்கின்றன ? அவைகளும் உலகை மறந்து கேட்கின்றன போலும்! அவன் பாடும் பாட்டு என்ன பாட்டு அதற்கு ராகம் வகுத்தவர் யார்? தாளம் அமைத்தவர் யார்?—அது நாடோடிப் பாட்டு அதற்கு அவன் பாடுவதுதான் ராகம்; வண்டியின் கடகடக் கடகடக் என்ற சத்தமே தாளம்.

இந்த ஜாதியில் சேர்ந்ததுதான் கைக்குழந்தை அறிந்து இன்புறும் பாட்டு. நாடோடி இலக்கியத்திலே சேர்ந்த பாட்டு அது. அழுது சிணுங்கும் குழந்தைக்குப் பாலூட்டித் தூளியில் இட்டு நாவை அசைத்துத் தாலாட்டுப் பாடுகிறாள் தாய். அவள் பாட்டிலே மயங்கிக் குழந்தை தூங்கிப் போகிறது. என்ன மோகனமான பாட்டு ! அந்தப் பாட்டின் குழைவிலே குழந்தை என்ன இன்பத்தைக் காணுகிறது ! நாமும் குழந்தையாக இருந்திருக்கிறோம். தாயின் தாலாட்டிசையிலே தூங்கியிருக்கிறோம். அப்போது குழந்தையுள்ளம் என்ன கனவு காண்கிறது ? என்ன இன்பத்தை அனுபவிக்கிறது ?—நமக்கு நினைவில்லேயே! சென்று போன பிறவிகளைப் பற்றி ஏதாவது நமக்கு நினைவிருக்கிறதா? அதுபோன்றதுதான் குழந்தைப் பருவத்து இன்பக் கனவும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/12&oldid=1046888" இலிருந்து மீள்விக்கப்பட்டது