பக்கம்:குழந்தை உலகம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்மான் பெருமை

17



ஆண்டம்மான் என்ன தந்தான் ஆனை கொடுத்துவிட்டான்
குட்டியம்மான் என்ன தந்தான் குன்றிமணித் தொட்டிலிட்டான்
செல்லம்மான் என்ன தந்தான் செம்பவழத் தொட்டிலிட்டான்
நல்லம்மான் என்ன தந்தான் நற்பவழத் தொட்டிலிட்டான்.

மற்றோர் அம்மான் குழந்தைக்குப் பால் புகட்டுவதற்காகச் சங்கு வாங்கப் போனான். உப்புக் கடலில் பிறக்கும் சங்கையா இந்த மருமானுக்குத் தருவது? பால் புகட்டும் சங்கு பாற்கடலிலே பிறந்ததாக இருந்தால்தான் தன் மருமானுக்குப் பெருமை என்று அங்கே சங்கெடுக்கப் போனானாம்.

பொற்சங்கால் போட்டினால் புத்தி குறையுமென்று
வெள்ளிச்சங்கால் போட்டினால் வித்தை குறையுமென்று
நடுக்கடலில் மூழ்கி நாரணனார் சங்கெடுக்கத்
திருப்பாற் கடல்மூழ்கித் திருமாலின் சங்கெடுக்கப்
பொருக்கென் றெழுந்து புறப்பட்டான் உங்களம்மாள் !

அப்படிப் போனவன் சாமர்த்தியம் ஆச்சரியமான தல்லவா? அவன் கடலில் மூழ்கி எழும் சந்திரனாகவோ சூரியனாகவோதான் இருக்கவேண்டும் !

அஞ்சு கிளியெழுதி அம்மான்கள் பேரெழுதிக்
கொஞ்சு கிளியெழுதிக் கொண்டுவந்தான் ஆசாரி
கிண்ணியிலே சந்தனமும் கிளிமூக்கு வெற்றிலையும்
தங்கத் தலைப்பாவும் சாலுவையும் மேல்போட்டுச்
சங்கு கழுவித் தளிகையிலே பாலாற்றச்
சங்குகொள்ளப் போனஅம்மான் சந்திரனோ சூரியனோ !

தாய்க்குத் தான் புகுந்த குலத்தின் பெருமையும் நினைவுக்கு வருகிறது. தன் அருமைக் கணவன் சிறப்பை நினேவு கூர்கிறாள். ஆனால் மறுபடியும் குழந்தையின் அம்மான் புகழிலே வந்து பாட்டு நிற்கிறது

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/26&oldid=1047205" இலிருந்து மீள்விக்கப்பட்டது