பக்கம்:குழந்தை உலகம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15. கொசுவின் பெருமை

னிதன் உலகத்திலுள்ள ஜீவராசிகளிலெல்லாம் சிறந்தவனாகவும் அறிவு படைத்தவனாகவும் இருக்கிறான். உலகத்துப் பிராணிகளை அடக்கி ஆளவும், அழிக்கவும் அவன் ஆற்றல் படைத்திருக்கிறான்.

ஆனாலும் மிக மிகச் சிறிய பிராணிகளுக்கு அவன் அஞ்சி நடுங்குகிறான், புழு, பூச்சிகளைக் கண்டால், “ஐயோ, வியாதி வந்துவிடுமே!” என்று பயந்து பாதுகாப்புத் தேடிக் கொள்கிறான். மூட்டைப் பூச்சி, கொசு முதலிய பிராணிகளால் அவன் படும் சிரமம் கொஞ்சநஞ்சமன்று. எத்தனையோவித மருந்துகளை உண்டு பண்ணி ஜலத்தில் கலந்தும், நிலத்தில் தெளித்தும் கொசு சம்ஹாரம் செய்கிறான். போதாக் குறைக்குக் கொசுவலை என்னும் கோட்டைக்குள் புகுந்து கொண்டு நித்திரா தேவியின் துணையை நாடுகிறான். இவ்வளவு பெரிய உடம்பு படைத்த மனிதன் ஒரு சிறு கொசுவுக்கு அஞ்சு வது ஈசுவர சிருஷ்டியில் பெரிய விநோதம்! ‘கொசுவைப் போல நசுக்கி விடுவேன்’ என்று வீரம் பேசும் மனிதன் ஒரு கொசுவை அழித்தால் ஒழிந்துவிடுமா? அசுரர்களைப் போலப் புங்கானுபுங்கமாக அவை புறப்படுகின்றன.

வண்டு ரீங்காரம் செய்கிறது, இசை பாடுகிறது என்று காவியங்களிலே பார்க்கிறோம். நாம் அதைக் கேட்பது. மிகவும் அருமை. ஆனால் கொசுவின் ரீங்காரத்தை ஒவ்வொருவரும் கேட்டிருக்கிறோம். ‘கொசுவின் சில் பாடல்’ என்று யாரோ ஒரு புலவர் கூட அதைப் பாடியிருக்கிறார். நாடோடிப் பாவலனும் கொசுவின் பெருமையைக் குறித்துப் பாடியிருக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/88&oldid=1323525" இலிருந்து மீள்விக்கப்பட்டது