பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலநாட்டு வரலாறு

123


அமெரிக்காவையும் எடுத்துக் கொள்வோம். இங்கிலாந்து ஒரு காலத்தில் மீன் பிடிக்கும் தீவாகத்தானே இருந்தது! இன்றைய அமெரிக்கா ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்தானே உருவாயிற்று! இவை போன்றவற்றைப் பழம்பெரும் நாடுகள் என்று எவ்வாறு சொல்ல முடியும்? கெடிலக்கரைத் திருமுனைப்பாடி நாடு இவற்றிற்கு முற்றிலும் வேறுபட்டதாகும்.

கெடிலக்கரைப் பகுதியில் கரடு முரடான கல்மலைப்பாங்கோ காடுகளோ இல்லையாதலின் அன்று தொட்டே மக்கள் வாழ்ந்து வந்திருக்கவேண்டும். வரலாற்றுக் காலத்திற்கு முன்பே அங்கே மக்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதற்குத் தக்க சான்று உண்டு. உழவுக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் தேவையான நீரைத் தரும் ஆற்றங்கரைகளில் மிகுதியாக மக்கள் வாழ்வார்கள் என்ற இயற்கைச் சான்று ஒருபுறம் இருக்க, தென்னார்க்காடு மாவட்டத்தில் சிலவிடங்களில் கிடைத்துள்ள பழைய கற்கருவிகளும், பரவலாகப் பலவிடங்களில் காணப்படும் சவக்குழிகளும் அப்பகுதியின் பழைய பழமையைப் பறைசாற்றி யறிவிக்கின்றன. மக்கள் கல்லால் கருவிகள் செய்து பயன்படுத்திய காலம் ‘கற்காலம்’ (Stone Age) எனப்படும். இது, ‘பழைய கற்காலம்’ (Paleolithic) எனவும், ‘புதிய கற்காலம்’ (Neolithic) எனவும் இருவகைப்படும். கற்காலம் எனப்படுவது, இற்றைக்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகட்கு முற்பட்ட காலமாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இரும்பு போன்ற தாதுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, இயற்கையாய் எளிதாய்க் கிடைத்த கற்களைக் கொண்டு கருவிகள் செய்து பண்டைய மக்கள் பயன்படுத்தினார்கள். இத்தகைய கற்கருவிகள் சிலவற்றைத் தென்னார்க்காடு மாவட்டத்துப் பழங்குடி மரபினர் சிலர் தம் கோயில்களில் வைத்துத் தெய்வத் தன்மை உடையனவாகக் கருதிப் போற்றிப் பாதுகாத்து வருகின்றனர். குறிப்பாகக் கல்வராயன் மலை வட்டாரப் பகுதியில் இவற்றைக் காணலாம். இச்சான்று கொண்டு தென்னார்க்காடு மாவட்டமாகிய திருமுனைப்பாடி நாட்டின் பழமையைப் பழைய கற்காலம் வரைக்கும் கொண்டு செல்லலாம்.

மற்றும், இம்மாவட்டத்தில் திருக்கோவலூர் வட்டத்திலுள்ள கொல்லூர், தேவனூர் முதலிய இடங்களிலும், கள்ளக்குறிச்சி வட்டத்திலுள்ள கொங்கராய பாளையம், குண்டலூர் முதலிய இடங்களிலும் சவக்குழிகள் காணப்படுகின்றன. இவற்றுள் சில, 6 அடி நீளமும் 4 அடி அகலமும் 3 அடி ஆழமும் உடையனவாய்க் கற்களால்