பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

கெடிலக்கரை நாகரிகம்


அமைக்கப்பட்டுள்ளன. சிலவற்றில், எலும்புத் துண்டுகளுடன் மட்கலங்களும் இரும்புக் கருவிகளும் காணப்படுகின்றன. இவை, புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் புதைக்கப்பட்ட குழிகளாம். பழைய கற்காலத்திற்கும் உலோக காலத்திற்கும் (Metal Age) இடைப்பட்டது புதிய கற்காலம். புதிய கற்காலத்தில் மட்கலங்களும் இரும்புக் கருவிகளும் ஒரு சிறிது உண்டாகத் தொடங்கிவிட்டன.

பெரிய சால்களில் (பானைகளில்) பிணத்தை வைத்து மூடிப் புதைக்கும் வழக்கமும் அந்தப் பழங்காலத்தில் இருந்தது. இத்தகைய பிணச்சால்கள் கடலூர் வட்டத்துத் திருவதிகைப் பகுதியில் இப்போதும் கண்டுபிடிக்கப்படுகின்றன. எவ்வளவு வயதாகியும் இறக்காமல் இழுத்துப் பறித்துக் கொண்டிருக்கும் தொண்டு கிழங்களை, இத்தகைய சால்களில் உணவு - தண்ணீருடன் உயிரோடு வைத்துப் புதைக்கும் வழக்கமும் அன்று இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மையோ! இத்தகைய சால்கள் ‘முசுமுசுக்குச் சால்’ என்றும் ‘முசுமுசுச்சாலை’ என்றும் உலக வழக்கில் சொல்லப்படுகின்றன; இலக்கிய வழக்கில், [1]முதுமக்கள் சாடி’ எனவும், [2]'ஈமத்தாழி’ எனவும், [3]முதுமக்கள் தாழி’ எனவும் அழைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பிணங்களைச் சவக்குழிகள் கட்டியிடுவதும் முசுமுசுச் சாலில் புதைப்பதும் மிக மிகப் பழங்காலத்து வழக்கங்களாகும். இத்தகைய குழிகளும் சால்களும் காணப்படும் திருமுனைப்பாடி நாடு மிக்க வரலாற்றுத் தொன்மையுடையது என்பது தெளிவு.

ஆட்சி வரலாறு

நமக்குத் தெரிந்த வரையில் தமிழ் நாட்டு ஆட்சி வரலாற்றுத் தொடக்க காலம் என்பது கடைச் சங்க காலம்தான், அப்படியென்றால் கடைச் சங்க காலத்திற்குமுன் தமிழ் நாட்டில் வரலாறு ஒன்றும் நிகழவில்லை என்பது பொருளன்று; கடைச் சங்க காலத்திற்குமுன் தமிழ் நாட்டில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்வதற்குரிய எழுத்துச் சான்று கிடைத்திலது என்பதே அதன் பொருள். கடைச் சங்க காலம் கி.மு. 500 -ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 500 - ஆம் ஆண்டு வரையும்


  1. விக்ரமசோழன் உலா - வரி 15, 16; தக்கயாகப் பரணி - 376 - உரை.
  2. புறநானூறு - 256.
  3. புறநானூறு - 256 உரை.