பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

கெடிலக்கரை நாகரிகம்


கலைஞர்கட்கும் தேர்களை வழங்குவானாம்; அதனால் ‘தேர் வண்மலையன்’ (நற்றிணை - 100 ) எனச் சிறப்பிக்கப் பெற்றுள்ளான். முடியுடை மூவேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர்களுங்கூட, பல காரணம் பற்றி இவன் உதவியை நாடுவார்களாம். இவன் அவரவர்க்கு வேண்டிய உதவிகளைப் புரிவானாம். இவன் உதவியால் முடிசூடிக் கொண்டவரும் உண்டு. இச் செய்தியை, கபிலர் பாடிய

“வீயாத் திருவின் விறல்கெழு தானை
மூவருள் ஒருவன் துப்பா கியரென
ஏத்தினர் தரூஉம் கூழே நுங்குடி”

என்னும் புறநானூற்றுப் (122) பாடல் பகுதிக் குறிப்பால் தெரிந்து கொள்ளலாம். கபிலர், பரணர், கல்லாடனார், கோவூர் கிழார், மாறோக்கத்து நப்பசலையார், பேரி சாத்தனார், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், வடம வண்ணக்கன் பெருஞ் சாத்தனார் முதலிய சிறந்த புலவர் பெருமக்கள் பலர் மலையமான் காரியைப் புகழ்ந்து பாடியிருப்பதிலிருந்து, மலையமான் தமிழின் பால் மிக்க காதல் கொண்டவன் என்பதும், தமிழ்ப் புலவர்கட்கு வரையாது வாரி வழங்கிய வள்ளல் என்பதும் புலனாகும். சுருங்கச் சொல்லின், திருமுடிக்காரி ஒரு பெரிய கொடை மறவன் என்பது போதரும், ‘இவனுக்கென ஓர் உடைமையும் இல்லை; எல்லாம் பிறருடையன வாக்கினான்’ எனக் கபிலர் புறப் (122) பாடலில் கூறியிருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

படை மறம்

கொடை மறம், படை மறம் என்னும் இரண்டனுள் கொடை மறம் அரியது; படைமறம் எளிது. எனவே, அரிய கொடை மறத்திலேயே சிறந்தவனாயிருந்த காரி, எளிய படைமறத்தில் மிகமிகச் சிறந்து விளங்கினான் என்பது சொல்லாமலே விளங்கும்.

பேரரசர்களாகிய சேர சோழ பாண்டியர்கள் துணை வேண்டிய போதெல்லாம் சென்று அவர்களின் பகைவர்களைவென்று அவர்களை அரியணையில் அமர்த்தியிருக்கிறான் காரி. குதிரையூர்ந்து போர் புரிவதில் வல்லவன் இவன். இவனது குதிரைக்கும் காரி என்பதே பெயர். இவன், ஓரியுடன் போர் புரிந்து கொன்று கொல்லியைச் சேரர்க்கு ஈந்தான் என்னும் செய்தியை,