பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை அரசுகள்

141


காரிக் குதிரைக் காரியொடு மலைந்த
ஓரிக் குதிரை ஓரி"

என்னும் சிறுபாணாற்றுப்படைச் செய்யுட் (110 -111) பகுதியாலும்,

“செவ்வேல், முள்ளூர் மன்னன் கழல்தொடிக்காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு நத்த
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி"

என்னும் அகநானூற்றுப் பாடல் (209) பகுதியாலும் அறியலாம்

முள்ளூரில் இவனை எதிர்த்த ஆரிய மன்னர் பலர், இவனது ஒரே வேல் படைக்கு அஞ்சி ஓடிய செய்தி,

"ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்
பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடியாங்கு”

என்னும் நற்றிணைப் (170) பாடல் பகுதியால் தெரிய வருகிறது.

மலையமான் மக்கள்

மலையமான் பெருமறவனாய்த் திகழ்ந்திருந்தும், முடியுடை மூவேந்தர்க்கும் மாறிமாறி உதவி செய்யும் துணைவனாய் விளங்கியிருந்தும், கோவூர்கிழார் பாடியுள்ள புறநானூற்றுப் (46) பாடல் ஒன்றைப் படிக்குங்கால், மலையமான் குடிக்கும் சோழர் குடிக்கும் இடையே ஒருகால் பகை படர்ந்திருந்தமை புலப்படுகிறது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமானின் இளைய மக்கள் இருவரை யானையைக் கொண்டு இடறிக் கொல்ல ஏற்பாடு செய்தான். திறந்த வெளியில் மக்கள் பலர் குழுமியிருந்தனர். நடுவே மலையமான் சிறார்கள் நின்று கொண்டிருந்தனர். கொலை யானை கொண்டு வரப்பட்டது. சிறார்கள் தம் சிறுமையால் யானையை வேடிக்கை பார்த்து அதற்கு அஞ்சாமல், சுற்றியிருந்த மக்களைப் பார்த்து மிரண்டனர். இஃதறிந்த புலவர் கோவூர் கிழார், கிள்ளி வளவனை அணுகி, “சோழ மன்னா! நீயோ, புறாவுக்காகத் தன் உடலையீந்த சிபிச்சோழனின் வழிவந்தவன்; இச் சிறார்களோ, புலவர்க்குத் தம் உடைமையை வரையாது வழங்கும் வள்ளல் மரபினர்; எனவே, நீ இவர்களைக் கொல்லுதல் தகாது’ என அறிவு கொளுத்தினார். குழந்தைகள் இருவரும் உயிர் பிழைத்தனர். இச் செய்தியை அறிவிக்கும் புறப்பாடல் வருமாறு: