பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

கெடிலக்கரை நாகரிகம்


இறைவனுக்கு ஆட்செயும் ஊருமாகும்’ எனச் சுந்தரர் கூறியுள்ளார். இதன் வாயிலாக, திருநாவலூர்க்கும் நரசிங்க முனையரையர்க்கும் இருந்த நெருங்கிய தொடர்பு புலப்படும்.

மற்றும், முனையரையர் மரபினர் நரசிங்கன், இராமன் என்னும் இரு பட்டப் பெயர்களையும் மாறி மாறி வைத்துக் கொண்டு நரசிங்க முனையரையர், இராம முனையரையர் என அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நரசிங்கன், இராமன் என்னும் பெயர்கள் திருநாவலூர் வட்டாரத்து மக்களிடையே மிகுதியாய் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனாலும், முனையரையர் மரபினர்க்கும் திருநாவலூர் வட்டாரத்திற்கும் இருந்த உறவு அறியப்படும்.

இச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு ஆராயின், திருநாவலூர் வட்டாரமே நரசிங்க முனையரையரின் தலைநகராய் இருந்திருக்கக் கூடும் என நுனித்துணரலாம். இதற்குத் தக்க சான்று வேறு ஒன்றும் கூற முடியும்:

திருநாவலூரில் சிவன் கோயிலுக்கு எதிரேயுள்ள சிறிது மேடான நிலப்பகுதியை அவ்வூர் மக்கள் கச்சேரி மேடு என அழைக்கின்றனர். “கச்சேரி” என்பது அரசனது திருவோலக்க அவையைக் குறிப்பதாகும். அவ்விடத்தில் அரசவை கூடி அரச வினைகள் ஆராயப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அங்கே அரசவை கூடிற்றென்றால், அதுதானே அரசனது தலைநகராய் இருந்திருக்கக்கூடும்! எனவே, நரசிங்க முனையரையர் சுந்தரரைப் பிள்ளையாக எடுத்து வளர்த்த செய்தியைக் கொண்டும், கச்சேரி மேடு என்னும் பழைய வழக்காற்றுப் பெயரைக் கொண்டும், திருநாவலூர் நரசிங்க முனையரையரின் தலைநகராயிருந்திருக்க வேண்டும் எனக் கொள்ளலாம். இது குறித்து மாற்றுக் கருத்து ஒன்றும் கூறலாம்:

கெடிலத்தின் வடகரையில் உள்ள திருநாவலூருக்குத் தென் மேற்கே 4 கி.மீ. தொலைவில் - கெடிலத்தின் தென்கரையில் சேந்த மங்கலம் என்னும் ஊர் ஒன்று உள்ளது. நரசிங்க முனையரையருக்குச் சில நூற்றாண்டுகள் பிற்பட்ட கோப்பெருஞ் சிங்கன் என்னும் வலிய மன்னனுக்குத் தலைநகராக விளங்கிய ஊர் இது. பாழடைந்த கோட்டை ஒன்றை இன்றும் இவ்வூரில் காணலாம். இவ்வூர் பற்றி, ‘கோப்பெருஞ் சிங்கன்’ என்னும் தலைப்பிலும், சேந்த மங்கலம்’ என்னும் தலைப்பிலும் வேறிடங்களில் விரிவாகக் காணலாம். இந்த ஊர் தான் நரசிங்க முனையரையரின் தலைநகராய் இருந்திருக்கக் கூடும் என்றும் ஒரு கருத்து