பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

கெடிலக்கரை நாகரிகம்


பாடி, அவர்கள் வாழ்ந்த திருவதிகையையும் சீர்காழியையும் காலால் மிதிக்க அஞ்சிய சுந்தரர் அவர்கள் காலத்திற்கு அடுத்த அடுத்த நூற்றாண்டினராகத்தான் இருந்திருக்க முடியும். எனவே, சுந்தரர் எட்டாம் நூற்றாண்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தார் எனப் பொதுப் படையாகக் கூறுவதோடு அமைதி பெறுவதைத் தவிர வேறு வழியில்லை.

சுந்தரர் பதினெட்டு ஆண்டுகளே உலகில் வாழ்ந்தார் என்று கூறப்படுகிறது. இது பொருத்த முடையதாகத் தெரியவில்லை. அவர் இன்னும் பல ஆண்டுகள் உலகில் வாழ்ந்திருப்பார் என்றே தோன்றுகிறது.

சுந்தரர் பிறந்த மனை

சுந்தரர், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சிறப்புப் பெயராலும் நம்பி ஆரூரர் என்னும் பிள்ளைமைப் பெயராலும் அழைக்கப்படுவதல்லாமல், திருநாவலூரில் பிறந்து வளர்ந்தவரானதால், திருநாவலூரார் என ஊர்ப் பெயராலும் அழைக்கப்படுகிறார். இவர் பிறந்த மனை இது என இன்றும் திருநாவலூரில் சுட்டிக் காட்டப்படுகிறது. அந்த மனை, திருநாவலூர்க் கோயிலுக்கு வடபுறமாகப் பக்கத்திலேயே உள்ளது. கோயில் பூசனை புரியும் குருக்கள் மரபினர் கோயிலுக்குப் பக்கத்திலேயே வீடு அமைத்துக் கொண்டு இருப்பது வழக்கம். சுந்தரர் குருக்கள் மரபினராதலால், கோயிலுக்குப் பக்கத்தில் சுட்டிக் காட்டப்படும் அந்த மனையை, சுந்தரர் பிறந்த மனையாகத் துணிந்து நம்பலாம். அந்த மனையில் சுந்தரர் நினைவாக இப்போது ஒரு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அக் கட்டடத்தைக் கீழுள்ள படத்தில் காணலாம்.