பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

கெடிலக்கரை நாகரிகம்


என்னும் பெயர் மறைய, நல்லாற்றுருக்கு அந்தப் பெருமை கிடைத்தது. எத்தனையோ ஊர்கள் இவரது திருமேனியைத் தாங்கியிருப்பினும், அதனை நிலையாகத் தன்னிடத்தே அடக்கம் செய்துகொண்டு கோயில் கொண்டுள்ள பெருமையும் இந்த நல்லாற்றுாருக்கே கிடைத்தது.

சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள்

பெரும் புலமைச் சிவப்பிரகாச அடிகளார் பல நூல்கள் இயற்றியுள்ளார். அவையாவன:

சோண சைலமாலை, செந்தில் நிரோட்டக யமக அந்தாதி, திருவெங்கைக் கோவை, திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, திருவெங்கை யலங்காரம், சிவப்பிரகாச விகாசம், தருக்க பரிபாடை, நால்வர் நான்மணிமாலை, சத மணிமாலை, சிவஞான பாலைய சுவாமிகள் நெஞ்சு விடுதுது, சிவஞான பாலைய சுவாமிகள் தாலாட்டு, சிவஞான பாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ், சிவஞான பாலைய சுவாமிகள் கலம்பகம், சிவஞான பாலைய சுவாமிகள் திருப்பள்ளி யெழுச்சி, கூவப் புராணம், பிரபுலிங்க லீலை, வேதாந்த சூடாமணி, சித்தாந்த சிகாமணி, பழமலை யந்தாதி, பிட்சாடன நவமணிமாலை, பெரிய நாயகியம்மை கட்டளைக் கலித்துறை, பெரிய நாயகியம்மை நெடுவிருத்தம், இயேசு மத நிராகரணம், நன்னெறி, சிவநாம மகிமை, தலவெண்பா, இட்ட லிங்க அபிடேக மாலை, நெடுங்கழிநெடில், குறுங்கழிநெடில், நிரஞ்சன மாலை, கைத்தல மாலை, சீகாளத்திப் புராணம் - இடைப்பகுதி முதலியனவாம்.

காலம்

சிவப்பிரகாச அடிகளாரின் காலம் பதினேழாம் நூற்றாண்டு எனச் சிலரால் கூறப்பட்டுள்ளது. இவர்தம் வாழ்நாளில், இத்தாலிநாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்து கிறித்துவம் பரப்பிய பெஸ்கி (Father Beschi) என்னும் வீரமாமுனிவருடன் சமயப் பிணக்குற்று ‘இயேசு மத நிராகரணம்’ என்னும் நூல் இயற்றி யிருப்பதாகத் தெரிகிறது. அந்த வீரமாமுனிவர் என்னும் வெள்ளைப் பாதிரியார் தமிழ் நாட்டில் கி.பி. 1710 முதல் 1747 வரை வாழ்ந்தார். எனவே, சிவப்பிரகாசரின் காலம், பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியும் என்பது தெளிவு. இத்தனை பெரு நூல்கள் இயற்றிய கற்பனைக் களஞ்சியம் மொத்தம் வாழ்ந்தது முப்பத்திரண்டு ஆண்டுகள் தாம் என்பதை எண்ணும்போது உள்ளம் மிகவும் வேதனையுறுகிறது. இன்னும் பல்லாண்டுகள் இவர் வாழ்ந்திருப்பின், இன்னும் எத்தனையோ உயரிய நூல்கள் இயற்றியிருப்பாரே!