பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடில நாட்டு வளங்கள்

239


முள்ளூர் மலையை ஆரியர் முற்றுகையிட்டதாகவும் அவர்களை மலையமான் திருமுடிக்காரி முறியடித்ததாகவும் நற்றிணை கூறகிறது. பெரும்புகழுடைய முள்ளூர், மிகப் பெரிய முள்ளூர் என்னும் பொருள்களில் ‘பேரிசை முள்ளுர்’ ‘மா இரு முள்ளூர்’ என நற்றிணைப் பாடல்கள் கூறுவது காண்க. ‘முள்ளூர்க் கானம்’ என முள்ளுர்க்காட்டை கபிலரது குறுந்தொகைப் பாடல் குறிக்கிறது. முள்ளூர் மலைக்காட்டில் மழை மிகுதியாகப் பெய்வதாகக் கபிலர் புறநானூற்றுப் பாடலில் கூறியுள்ளார். இரவே தூங்குவது போன்ற இருள் செறிந்த அடர்ந்த காடும், பறையொலி போல் அருவி முழங்கியிறங்கும் மலையும் முள்ளூரில் இருப்பதாகப் புறநானூற்றில் மாறோக்கத்து நப்பசலையார் கூறியுள்ளார்; அவர் மேலும் ஒரு புறப்பாடலில், கபிலர் பாடிய குறைவற்ற பெருஞ்சிறப்புடைய பெரிய முள்ளுர் மலை எனக்குறிப்பிட்டு, அம்மலைக் காட்டில் வந்து பதுங்கியிருந்த சோழ மன்னனை மலையமான் திருக்கண்ணன் காப்பாற்றி, அச்சோழனுக்கு மீண்டும் சோழநாடு கிடைக்கும்படி செய்தான் என்று ஒரு செய்தி தெரிவித்துள்ளார். இவ்வாறு பாடல் பெற்ற பழம்பெரு வரலாற்றுப் புகழுடைய முள்ளூர் மலையையும் காட்டையும் தன்னகத்தே கொண்டது திருக்கோவலூர் வட்டம்.

இவ் வட்டத்தில் திருநாவலுர் வரையும் மலைப்பாங்கைக் காணலாம். ஆங்காங்கே தனித் தனிக் கற்களாயினும் தரைக்குமேல் தலையை நீட்டிக் கொண்டிருக்கும். தோன்றும் இடத்திலிருந்து திருநாவலூருக்கு மேற்குப் பகுதி வரையும் கெடிலம் பாறைப் பாங்கிலேயே ஒடி வருகிறது என்று சொல்லலாம்; அந்தப் பகுதியில் சில இடங்களில் ஆற்றில் மணலைக் காண்பதரிது. சில இடங்களில் ஆற்றின் கரைப் பகுதிகளில் கட்டை வண்டியும் செல்ல முடியாத அளவிற்குப் பாறைகள் படர்ந்து பரவி இருக்கும். அப்பர் பெருமான் தமது தேவாரத்தில் ‘வரைகள் வந்து இழிதரும் கெடிலம்’ எனப் பாடியிருப்பது பொருத்தமே!

கேப்பர் மலை

அடுத்துக் கடலுர் வட்டத்திற்குள் வந்தால், கருங்கல் மலைக்குன்றுகளையும் பாறைகளையும் பார்க்க முடியாது. அதற்குப் பதிலாக இங்கே கேப்பர் மலைத் தொடர்ச்சியைக் காணலாம். இம்மலை செம்மண் கலந்த செங்கல் மலையாகும். இம்மலைத் தொடர்ச்சி கூடலூருக்கு மேற்கே உள்ளது. கடல் மட்டத்திற்கு நூறடி உயரம் உடையது இது. கடலுர் வட்டத்தின் கிழக்குப் பகுதியில் சில கி.மீ. தொலைவு இம் மலையின் அடிவாரத்தை ஒட்டிக் கெடிலம் ஆறு ஓடி வருகிறது. இம் மலை