பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

கெடிலக்கரை நாகரிகம்


கெடிலத்தைப் பொறுத்த வரையும் எந்தக் காலத்திலும் நீர் வற்றுவதில்லை. மழை பெய்யாத போதும் ஊற்று நீர் ஆற்று நீர் ஆகிறது; அதனால் கெடிலம் வற்றாத ‘உயிர் ஆறு’ (சீவநதி) எனப் புகழப் படுகிறது.

நிலக்கனிவளம்

தமிழகத்திலேயே தென்னார்க்காடு மாவட்டமும் சேலம் மாவட்டமுந்தாம் நிலக்கனிவளம் (Minerals) மிக்க பகுதிகள். தென்னார்க்காடு மாவட்டத்துப் பழுப்பு நிலக்கரியும் சேலம் மாவட்டத்து இரும்புக் கனியும் சேர்ந்து கொண்டால் கேட்கவா வேண்டும்! பொதுவாகத் தென்னார்க்காடு மாவட்டத்தில் செம்பு, ஈயம், துத்த நாகம், வனேடியம், கெலேனியம், தோரியம், நிலக்கரி, நிலத்தடி எண்ணெய், சுண்ணாம்புக்கல், கெட்டி மண், பொம்மைக் களிமண் முதலிய நிலக் கனிவளங்கள் நிறைந்திருக்கின்றன; சிறப்பாகக் கடலூர் வட்டத்தில் எஃகு உண்டாக்க உதவும் வனேடியம், அணுவிலிருந்து ஆற்றலைப் பெருக்கப் பயன்படும் தோரியம், பல்முனைப் பயனுள்ள கெட்டி மண், உரம் செய்ய உதவும் வெண்காவி மண், பொம்மை செய்ய உதவும் களிமண், சிமிட்டி செய்ய உதவும் வெள்ளை மண், நிலத்தடி எண்ணெய், பல்வேறு பயனளிக்கும் பழுப்பு நிலக்கரி, சிமிட்டி முதலியவை செய்ய உதவும் சுண்ணாம்புக்கல் (சுக்கான்கல்) முதலியவை உள்ளன. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி கண்டு பிடிக்கப்பட்டுத் தோண்டி எடுக்கப்படுவது போலவே மற்ற வளங்களும் தோண்டி எடுக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. இப் பகுதியிலுள்ள சுண்ணாம்புக்கல் (Limestone) வளம் தோண்டியெடுக்கப்பட்டால் பெரும் பயன் விளைவும்.

நெய்வேலியில் நிலக்கரி தோண்டும்போது கிடைப்பது போன்ற வகைக் களிமண் கெடிலக்கரையிலுள்ள கடலுரில், பண்ணுருட்டி முதலிய ஊர்ப்பகுதிகளிலும் கிடைக்கிறது. நெய்வேலிக் களிமண்ணால் என்னென்னவோ செய்யப்பட விருக்கின்றன. கடலூர் - வண்டிப் பாளையம் பகுதியிலும் பண்ணுருட்டியிலும் வண்ணப் பொம்மைகள் பல செய்யப்படுகின்றன - பண்ணுருட்டிப் பொம்மைகள், மிகவும் பெயர் பெற்றனவன்றோ? பண்ணுருட்டிக்கு அடுத்த காடாம் புலியூர்ப் பகுதியில் உள்ள ஒருவகை வெள்ளை மண் சிமிட்டி செய்ய டால்மியாபுரத்திற்குக் கொண்டுபோகப் படுகிறது. அடுத்து, திருவயிந்திரபுரம் மலைப் பகுதியில் வெட்டி எடுக்கப்படும் வெண்காவிக் களிமண் குறிப்பிடத் தக்கது. கல்