பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

கெடிலக்கரை நாகரிகம்


திருவயிந்திரபுரம், பண்ணுருட்டி, திருவெண்ணெய் நல்லூர் முதலிய ஊர்களின் வழியாகச் சென்று கடலூருக்கு வடமேற்கிலுள்ள திருக்கோவலூரை அடைகிறது. இந்தப் பாதை, தான் புறப்படும் திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கே 5 கி.மீ. தொலைவிலுள்ள திருவயிந்திரபுரம் என்னும் ஊருக்கு அண்மையில் - திருவயிந்திரபுரம் அணைக்குக் கீழ்ப் பக்கத்தில் - கெடிலத்தைக் கடந்து செல்கிறது. இங்கே ஆற்றில் பாலம் இல்லை. பாலம் இல்லாவிடினும், ஆற்றுப் படுகையின்மேல் பேருந்து வண்டிகள் (பஸ்) செல்கின்றன. திருவதிகைப் பக்கத்திலிருந்து கிழக்குநோக்கி ஓடிவரும் ஆறு, திருவயிந்திரபுரம் வந்ததும் வடக்குநோக்கித் திரும்பித் திசைமாற்றம் பெற்றிருப்பதாக முன்பு (பக்கம் : 50 - 51) பார்த்தோமே - அந்த வடக்கு நோக்கிய ஆற்றோட்டத்தின் குறுக்கேதான் இந்தப் பாதை செல்கிறது. இந்தப் பாதைக்கு மேல்புறம் மிக அண்மையில் திருவயிந்திரபுரம் அணை இருப்பதால் ஆற்று நீர் அணைக்கு மேல்புறம் தேக்கப் பட்டுள்ளது; அதனால் அணையின் கீழ்புறம் ஆற்றில் மிக மிகக் குறைந்த நீரே கசிந்து ஒடிக் கொண்டிருக்கிறது; இதனால்தான் இப் பாதையில் பாலம் இல்லாமலேயே பேருந்து வண்டிகள் எளிதில் செல்ல முடிகிறது. ஆனால், மழைக்காலத்தில் மட்டும் செல்ல முடியாது.

கடலூர் நடுவண் (பாலம்)

மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், கூடலூர் என்னும் மூன்று பெரும் பிரிவுகளையுடையது கடலுர் நகராட்சி. இவற்றுள் கூடலூருக்கு ‘முதுநகர் (Old Town) என்றும், ஏனையவற்றிற்குப் ‘புதுநகர்’ (New Town) என்றும் பெயர். புதுநகர்ப் பகுதியில் மஞ்சக்குப்பம் - புதுப்பாளையம் பகுதிக்கும் திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதிக்கும் இடையே கெடிலம் ஆறு வடக்கு தெற்காக ஒடுகிறது. ஆற்றின் கிழக்குக் கரையில் மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம் பகுதியும், மேற்குக் கரையில் திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதியும் உள்ளன. இரு பகுதிகட்கும் இடையே தெற்கு நோக்கிச் செல்லும் ஆறு, மஞ்சக் குப்பம் - புதுப் பாளையம் பகுதிக்குத் தெற்கே கிழக்கு நோக்கித் திரும்பி ஓடுகிறது. திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதிக்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவில் கூடலூர்ப் பகுதி உள்ளது; இவ்விரண்டிற்கும் இடையே ஆறு இல்லை.

கெடிலத்தால் பிரிக்கப்பட்டுள்ள மஞ்சக்குப்பம் -புதுப்பாளையம் பகுதியையும் திருப்பாதிரிப் புலியூர்ப்