பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

கெடிலக்கரை நாகரிகம்


(சூக்குமத் தனு) செய்துள்ள தீவினையை நுகர நிரயத்திற்கும் (நரகத்திற்கும்) நல்வினையை நுகர வானுலகிற்கும் (சுவர்க்கத்திற்கும்) சென்று மீண்டும் மண்ணுலகத்திற்கு வருவதுபோல், கூடலூர்த் துறைமுகத்திலிருந்து புறப்படும் கப்பல் கீழை நாடுகட்கும் மேலை நாடுகட்கும் சென்று மீண்டும் கூடலூரை அடைவதாக முதல் பாட்டில் ('சிங்களம்......மா னுமால்') கூறப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை, திருப்பாதிரிப் புலியூர்ப் புராண ஆசிரியராகிய சிதம்பர முனிவர் நேரில் பார்த்தே எழுதியிருக்கவேண்டும். இப்பொழுதும் கூடலூர் மீனவர்கள் படகுகளின் வாயிலாகவே இலங்கை வரையும் சென்று சரக்குகளை ஏற்றுமதி இறக்குமதி செய்துவரும் திறல் உடையவராயிருக்கின்றனர்.

பாடல் பெற்றதும் பழமையானதுமாகிய இந்தத் துறைமுகத்தில், ஒரு துறைமுகத்திற்கு இருக்கவேண்டிய கலங்கரை விளக்கு, சுமை தூக்கிகள் (Cranes), ஏராளமான படகுகள், தொழிலாளிகள், சேமிப்புக் கிடங்கு, கப்பல் வாணிக நிலையங்கள், புகைவண்டி இணைப்பு முதலிய அனைத்து வசதிகளும் உள்ளன. மிக்க பொருட் செலவுடன் மேலும் முயன்றால், இந்தத் துறைமுகமும் ஒரு பெரிய துறைமுகமாக மாறலாம்; பக்கத்திலேயே நெய்வேலித் திட்டமும் அதன் இணைப்பான சேலம் உருக்காலைத் திட்டமும் இருப்பதால் எதிர் காலத்தில் இது நடைபெறலாம்.