பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

கெடிலக்கரை நாகரிகம்


ஆண்ட வரலாறும், அவன் ஆறையர்கோன் ஆறை நகர்க் காவலன் என்றெல்லாம் இலக்கியங்களில் அழைக்கப் பட்டிருக்கும் செய்தியும், இந்நூலில் ‘கெடிலக்கரை அரசுகள்’ என்னும் தலைப்பில் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. (பக்கம் : 185 - 189). அந்த ஆற்றுார் இந்த ஊராகத்தான் இருக்கவேண்டும். வாணர் மரபு, ஒர் உழவர் பெருங்குடி மரபு என்பது ஈண்டு நினைவுகூரத் தக்கது. ஆற்றுாரும் திருக்கோவலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தில் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.

கிளியூர்

கிளியூர் மலையமான்களின் தலைநகராயிருந்த ஊர் இது. திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மலையமான் மரபினருள் ஒரு பிரிவினர், இந்தக் கிளியூரைத் தலைநகராகக் கொண்டு திருக்கோவலூர் வட்டத்தின் தென் பகுதியை ஆண்டதால் கிளியூர் மலையமான்கள் என அழைக்கப்பட்டனர். ஒரு காலத்தில் கிளியூர் ஒரு தலைநகராயிருந்தது என்பதை மெய்ப்பிக்கும் சுவடுகள் சில, அவ்வூர் வட்டாரத்தில் உள்ளன. கிளியூர் பற்றிய வரலாற்றுச் செய்திகள் பல அவ்வட்டாரத்து மக்களால் மிகவும் பெருமையாகப் பேசப்படுகின்றன.

கிளியூர் திருக்கோவலூருக்குத் தென்கிழக்கே 20 கி.மீ. தொலைவு அளவில் உள்ளது. இது பாதை வசதியற்ற குறுக்குவழித் தொலைவாகும். நல்ல பாதைகளின் வழியாகச் சுற்றிக்கொண்டு வரவேண்டுமானால் இன்னும் தொலைவு கூடுதலாகும். கிளியூருக்கு வடக்கே திருக்கோவலூர் - கடலூர் மாநில நெடுஞ்சாலையும், கிழக்கே சென்னை - திருச்சி பெருநாட்டு நெடுஞ்சாலையும், தெற்கே உளுந்துர்ப்பேட்டை - கள்ளக்குறிச்சி மாநில நெடுஞ்சாலையும், மேற்கே ஆசனூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதையும் உள்ளன. இந்த நான்கு சாலைகட்கும் நடுவே கிளியூர் உள்ளது. ஒரு காலத்தில் ஒரு தலைநகராயிருந்த கிளியூருக்குக் கட்டை வண்டிப் பாதையைத் தவிர வேறு நல்ல பாதையில்லாமை இரங்கத்தக்கது!

திருநறுங்குன்றத்திற்குத் தெற்கே 5 கி.மீ. தொலைவிலும், பிள்ளையார் குப்பத்திற்கு மேற்கே 5 கி.மீ. தொலைவிலும், களமருதூருக்கு வடமேற்கே 5 கி.மீ. தொலைவிலும், இறையூருக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவிலுமாக - இந்த நான்கு ஊர்கட்கும் நடுவே கிளியூர் உள்ளது. மலையமான்களின் தலைநகராயிருந்ததாதலின், இவ்வூர் இருக்குமிடத்தைத் தெளிவாகச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.