பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

341


திருமாணிகுழிப் பகுதியை ஆண்டு வந்தான். இவன் பல ஊர்க் கோயில்கட்கு அறம் பல புரிந்துள்ளான். இவன் தனக்குப் பல பட்டப் பெயர்களைச் சூட்டிக் கொண்டான் என்பது கல்வெட்டுகளால் தெரிகிறது. இதைக் கொண்டு இவன் தன்னைச் சிறுகச் சிறுக வளர்த்துக் கொண்டான் என்பது புலனாகும். இவனைப் பற்றிய கல்வெட்டுகளும் இவனது வளர்ச்சிக்குச் சான்று பகர்கின்றன. இந்த நிலையில் இவர் திருமாணிகுழியைத் தனதெனச் சொல்லிக் கொண்டு சோழனுக்கு அடங்காதிருந்திருக்கலாம்; இவனையடக்கிச் சோழன் இரண்டாம் குலோத்துங்கன் திருமாணிகுழியில் முடிசூட்டிக் கொண்டிருக்கலாம். திருமாணிகுழியில் தொடர்ந்து அரசப் பேராளர் பலர் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோழர் காலக் கல்வெட்டுகளில் திருமாணிகுழி பின்வருமாறு குறிக்கப்பட்டிருக்கிறது:

‘விருதராச பயங்கர வளநாட்டு மேற்கா நாட்டு உதவித் திருமாணிகுழி’

‘இராசராச வளநாட்டு மேற்கா நாட்டுஉதவித் திருமாணிகுழி’

‘சயங்கொண்ட சோழவள நாட்டு உதவித் திருமாணிகுழி’

கல்வெட்டுப் பகுதிகளிலுள்ள விருதராச பயங்கர வளநாடு, இராசராச வளநாடு, சயங்கொண்ட சோழவள நாடு என்பன, சோழப் பேரரசைக் (சோழ சாம்ராஜ்யத்தைக்) குறிக்கின்றன; அடுத்துள்ள ‘மேற்கா நாடு’ என்பது திருமாணிகுழி வட்டாரத்தின் பெயராயிருக்க வேண்டும். மேற்காநாடு என்னும் பெயர் ஏற்பட்டதற்கு யாதேனும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்யும். அடுத்து, ‘உதவித் திருமாணிகுழி’ என ஊரின் முன் உதவி என்னும் சொல் இருப்பதைக் கூர்ந்து நோக்கின், திருமாணிகுழி பல வகையிலும் உதவியாயிருந்தமை புலனாகும். அரசியல் அரங்கில் சோழப் பேரரசர்க்குத் திருமாணிகுழிப் பகுதி பெரிதும் உதவியாய் இருந்திருக்கலாம். திருமாணிகுழி இறைவன் வணிகருக்கு உதவி செய்ததாகச் சொல்லப்படும் புராணக் கதையின் அடிப்படையிலும் ‘உதவித் திருமாணிகுழி’ என்னும் பெயர் பொருத்தமாயிருக்கிறது. திருமாணிகுழி கோயிலில் ‘உதவி நாயகர்’ என்னும் பெயரில் இறையுருவம் உண்டு என்பது ஈண்டு மிகவும் குறிப்பிடத்தக்கது.

இவ்வூர், வீரபாண்டியன் (பதினான்காம் நூற்றாண்டு) காலத்துக் கல்வெட்டில் ‘நடுவில் மண்டலத்துத் திருமாணிகுழி’