பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362

கெடிலக்கரை நாகரிகம்


புதுச்சேரி, தூத்துக்குடி போன்ற செயற்கைத் துறைமுகமாயில்லாமல், ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இயற்கைத் துறைமுகச் சிறப்பும் கடலூர்த் துறைமுகத்திற்கு உண்டு.

4. இரண்டாவது பெரிய நகர்ப் பரப்பு

நகராட்சிப் பரப்பளவில் சென்னை போகத் தமிழகத்தில் இரண்டாம் இடத்தைக் கடலூரே பெற்றிருக்கிறது.

5. முதல் பெரிய திடல்

தமிழகத்தில் நகர் நடுவேயுள்ள பெருவெளித் திடல்களுள் (மைதானங்களுள்) கடலூர்த் திடலே மிகப் பெரியது. தமிழகத்திற்கு மட்டுமன்று - தென்னிந்தியாவிற்கே இதுதான் பெரிய திடல் என்று சொல்லப்படுகிறது. இத் திடலின் நீளம் 800 மீட்டர்; அகலம் 600 மீட்டர்; பரப்பளவு 15 ஏக்கர். பல ஊர்களில் இதனினும் பெரிய திடல் இருக்கலாம்; ஆனால் அவை ஊருக்கு வெளியே ஒருபுறமாக ஒதுங்கியிருக்கக் கூடும்; போதிய காப்பும் அழகும் பொலிவும் மக்கள் புழக்கமும் பெற்றில்லாதிருக்கக் கூடும்; ஆனால் கடலூர்த் திடல் நகர் நடுவேயுள்ளது. திடலைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் பெரிய மாளிகைகள் உள்ளன. திடலிலே சொற்பொழிவு மேடை, மணிக்கூண்டு, பூங்கா முதலிய வசதிகள் உண்டு. காண்பதற்குக் கவர்ச்சியாய், மணிக்கணக்கில் அமர்ந்திருக்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுவது கடலூர்த் திடல்.

6. முதல் முதலமைச்சர்

1947 ஆம் நாடு விடுதலை பெற்றதும் தமிழகத்தின் முதல் முதலமைச்சராயிருந்த உயர்திரு ஓமந்துார் இராமசாமி ரெட்டியார், கடலூரைத் தலைநகராகக் கொண்ட தென்னார்க்காடு மாவட்டத்தினராவார்; இந்த முதல் முதலமைச்சரை இங்கே குறிப்பிடவில்லை. நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே, மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தினால் சென்னை மாநிலத்தில் முதல் முதலாக அமைச்சரவை ஏற்பட்ட போது 1920 - 21 ஆம் ஆண்டில் முதல் அமைச்சராய்ப் பணிபுரிந்தவர் கடலூர்ப் பெரியார் அ. சுப்பராயலு ரெட்டியார் என்பவராவர். இப் பெரியார் 1906 தொடங்கி 1920 வரை கடலூர் நகராண்மைக் கழகத்தின் தலைவராயும் (சேர்மன்) தொண்டாற்றியுள்ளார்.

1917 ஆம் ஆண்டிற்கு முன் மாவட்டக் கழகங்கள் (District Boards) கலெக்டர்களின் தலைமையிலேயே ஆளப்பட்டு வந்தன.