பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை ஊர்கள்

363


1917 ஆம் ஆண்டு தான் தமிழகத்திலேயே முதல்முதலாக மக்கள் தலைவர் ஒருவர் ஒரு மாவட்டக் கழகத்தின் தலைவராக அமர்த்தப் பெற்றார். அவர் சுப்பராயலு ரெட்டியார்தான். அந்த மாவட்டக் கழகம் தென்னார்க்காடு மாவட்டக் கழகம்தான். இந்த வகையிலும் கடலூர் தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளது. முதல் முதலாக வட்டக் கழகங்கள் (Taluk Boards) ஏற்படுத்தப்பட்டதும் இம் மாவட்டத்தில்தான் என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.

7. தலை ஞாயிறு

தமிழக முழுவதும் அறிவொளி பரப்பிய தலை ஞாயிறாகிய ஞானியார் அடிகளார் வாழ்ந்த இடம் கடலூர்தான்.

8. கூட்டுத் தகுதி

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாகப் பல்வேறு தகுதிகளும் ஒருங்கிணைந்திருக்கும் நகரம் கடலூர் ஒன்றுதான். ஒர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தின் தலைநகர்த் தகுதி, ஒரு வட்டத்தின் தலைநகர்த் தகுதி, ஒரு மாவட்டத்தின் தலைநகர்த் தகுதி, மிகப் பெரிய நகர்ப் பரப்பு, பாடல் பெற்ற பழம்பதிப் பெருமை, கோட்டைச் சிறப்பு, புகைவண்டிச் சந்திப்பு நிலையம் (Junction), மூன்று ஆறுகள், கடற்கரை, துறைமுகம், வரலாற்றுச் சிறப்பு முதலிய பல்வேறு தகுதிகளையும் கூட்டாகப் பெற்றிருப்பதில் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாகக் கடலூரைத் தவிர வேறு எந்த ஊரையும் குறிப்பிட முடியாது. மற்ற ஊர்களில் ஒன்று இருந்தால் மற்றொன்று இராது

வசதிகள்

கடலூர் நகராட்சி எல்லைக்குள் இரண்டு கலைக் கல்லூரிகள், ஒன்பது உயர்நிலைப் பள்ளிகள். ஒரு தொழிற் பயிற்சி நிலையம், மூன்று ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், ஒரு தச்சுவேலை - கொல்ல வேலைப் பயிற்சி நிலையம், ஒரு கரும்பு ஆராய்ச்சி நிலையம், இரண்டு சவ்வரிசித் தொழிற்சாலைகள், மூன்று உரத் தொழிற்சாலைகள், ஐந்து எண்ணெய் ஆலைகள், ஒரு படகு கட்டும் தொழிற்சாலை, பல நெசவுத் தொழிற்சாலைகள், சாயம் போடும் தொழிற் சாலைகள், ஐந்து திரைப்பட மாளிகைகள் முதலியவை உள்ளன. நகராட்சியின் பல்வேறு பகுதிகட்கும் உள் நகர்ப் பேருந்து வண்டி (டவுன் பஸ்) வசதி உண்டு. கடலூரிலிருந்து தென்னார்க்காடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகட்கும் வெளி மாவட்டங்கட்கும் பேருந்து