பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை ஊர்கள்

365


காந்தியடிகளாரவர்கள் கடலூருக்கு வந்திருப்பது மிகப் பெரிய வரலாற்றுச் சிறப்பாகும். 18, 19, 20 ஆம் நூற்றாண்டுகளை விட்டு ஏழாம் நூற்றாண்டிற்குச் செல்வோமானால், மிகப் பெரும் புகழ் பெற்றிருந்த ‘பாடலிபுத்திரம்’ என்னும் சமணர்களின் தலைமையிருப்பிடத்தைக் கடலூர்ப் பகுதியில் மனக்கண் முன் காணலாம். திருநாவுக்கரசர் ’தரும சேனர்’ என்னும் தலைமைப் பட்டத்துடன் சமணர்களின் தலைவராய்த் திகழ்ந்ததும் இந்தக் கடலூர்ப் பகுதியில்தான்! சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியதால் கல்லிலே கட்டிக் கடலிலே போட அவர் தப்பிப் பிழைத்துக் கரையேறியதும் இந்தக் கடலூர்ப் பகுதியில்தான்! மற்றும், தன் துறைமுகத்தின் வழியாய் நடந்த வாணிகத்தின் வாயிலாகப் பல்லாயிரம் ஆண்டு காலமாக உலகின் பல்வேறு நாடுகட்கும் கடலூர் அறிமுகமாகியிருந்தது என்று சொன்னால் மிகையாகாது.

பெயர்ச் சிறப்பு

பெயரமைப்பும் கடலூரின் பெருமையைப் பறைசாற்றி அறிவிக்கிறது. கடலூர் என்பது குறிப்பிட்ட ஏதோ ஒர் ஊரின் பெயரன்று; பல ஊர்கள் சேர்ந்த ஒரு பெரு நகராட்சித் தொகுப்பிற்குச் சென்னை என்னும் பெயர் சூட்டப்பட்டிருப்பது போல, பல ஊர்கள் சேர்ந்த ஒரு நகராட்சித் தொகுப்பிற்குக் கடலூர் என்னும் பெயர் வழங்கப்படுகிறது. இந்தக் கடலூர்த் தொகுப்பில் மிகப் பழைமையும் பெருமையும் உடைய பெரிய பகுதிகளாகக் கருதப்படுபவை திருப்பாதிரிப் புலியூர், கூடலூர் என்னும் இரண்டுமேயாகும். இவற்றுள், திருப்பாதிரிப் புலியூர் திருக்கோயிற் சிறப்பால் பெயர் பெற்றது; கூடலூர் தொழில் - வாணிகத் - துறைமுகச் சிறப்பால் பெயர் பெற்றது. இந்நிலையில், பன்னெடுங்காலமாக இப் பகுதிக்கு வந்துபோன வெளிநாட்டாரை, கோயில் சிறப்புடைய திருப்பாதிரிப்புலியூர் கவர்ந்திருக்க முடியாது; தொழில் வாணிகத் துறைமுகச் சிறப்புடைய கூடலூரே கவர்ந்திருக்க முடியும்; எனவே, அவர்கள் இந்த வட்டாரத்தைக் கூடலூர் என்னும் பெயராலேயே அழைத்திருப்பார்கள் - கூடலூர் என்னும் பெயர்தான் அவர்கட்குத் தெரிந்திருக்கும்.

இந் நிலையில் கூடலூர் என்னும் பெயர் ஐரோப்பியர்களின் வாய்களில் புகுந்து கடலூர் என மறுபிறவி எடுத்திருக்கக்கூடும். கடலூர் என்னும் பெயர் ஆங்கிலத்தில் Caddalore’ என, ‘க’ என்னும் முதலெழுத்தைக் குறிக்க Ca’ போட்டு எழுதப்படாமல், ‘Cuddalore” என, “க” என்னும் முதலெழுத்தைக் குறிக்க Cu’ போட்டு எழுதப்படுவது ஈண்டு ஆராய்ச்சிக்குரியது. Cu’ போட்டு கூடலூர் என்று எழுதியிருந்ததைக் கடலூர்’ என்று படித்து