பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

386

கெடிலக்கரை நாகரிகம்


வண்டிப் பாளையத்தைச் சுற்றிலும் ஊடுருவிச் செல்கின்றன. நகரிலிருந்து வண்டிப் பாளையம் செல்லும் ஒன்றரை கி.மீ. (ஒரு மைல்) நீளச்சாலையில் ஏழு வாய்க்கால் பாலங்களைக் கடக்க வேண்டுமென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

வண்டிப் பாளையம் ஊரைச் சுற்றிலும் பல தென்னந் தோப்புகள் இருப்பதல்லாமல், ஊருக்கு நடுவிலும் ஒவ்வொரு வீட்டுத் தோட்டத்திலும் பல தென்னை மரங்கள் இருக்கும். ஒவ்வொரு வீட்டுத் தோட்டத்தையும் ஒரு சிறு தோப்பு என்று சொல்லலாம். கோடைக்காலத்தில் குன்னூர் - குற்றாலம் - கோடைக்கானல் செல்ல வேண்டியதில்லை. வீட்டுத் தோட்டத்தில் போய் நின்றால் போதும். வீட்டுத் தோட்டத்தை யடுத்து நன்செய் வயல் இருக்கும். வயலோர வாய்க்கால்களில் கெடிலம் ஆற்றுத் தண்ணிரைக் காணலாம். ஒருமுறை பாவேந்தர் பாரதிதாசனார் வண்டிப் பாளையம் வந்திருந்த போது, தோப்புக்கு நடுவில் இவ்வூர் இருப்பதால்தான் இவ்வளவு குளிர்ச்சியாயிருக்கிறது என்று வியந்து புகழ்ந்தார். கடலூர் நகராட்சி எல்லைக்குள் மிகவும் நீர்வளம் நிலவளம் செறிந்தது வண்டிப் பாளையம் பகுதிதான்.

பெயர்க் காரணம்

திருவயிந்திரபுரத்தருகில் வடக்கு நோக்கி வளைந்து ஒடும் கெடிலம், பத்தாம் நூற்றாண்டுக்குமுன் அவ்வாறு வளையாமல் நேர் கிழக்காகவே வந்து வண்டிப் பாளையத்தின் தெற்கு எல்லையில் ஒடி இவ்வூருக்குக் கிழக்கே கடலில் கலந்தது. சமணர்கள் நாவுக்கரசரைக் கல்லிலே கட்டிக் கடலில் போட, அவர் தப்பித்துக் கொண்டு, கடலிலிருந்து கெடிலத்தின் வழியாக எதிரேறி வந்து வண்டிப் பாளையத்தருகில் கரையேறினார். அதனால் வண்டிப் பாளையம் அந்தக் காலத்தில் கரையேற விட்ட குப்பம்’ என அழைக்கப்பட்டது. இச் செய்தி, தக்க சான்றுகளுடனும் படத்துடனும் இந்நூலில் வரலாறு கண்ட திசைமாற்றம்’ என்னும் தலைப்பில் மிக விரிவாக விளக்கப் பட்டுள்ளது. இவ்வூருக்கு மாணிக்கவாசகர் வந்தபோது அவருக்கு வழி விடுவதற்காக ஆறு திசை மாறியதாகப் புராணம் கூறுகிறது.

மேற்கூறிய செய்தியிலிருந்து, வண்டிப் பாளையத்தின் பழைய பெயர் கரையேறவிட்ட குப்பம் என்பது புலனாகும். இன்றும் ஆவணப் (ரிஜிஸ்டர்) பதிவுகளில் கரையேற விட்டவர் குப்பம் மதுரா என்பது பொறிக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக எங்கள் வீட்டு ஆவணப் பதிவு ஒன்றிலுள்ள பகுதி அதிலிருக்கிறபடியே வருமாறு: