பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

388

கெடிலக்கரை நாகரிகம்


இந்தக் ‘கரையேற விட்டவர் குப்பம்’ என்னும் பெயர் சிறிது சுருங்கிக் ‘கரையேறவிட்ட குப்பம்’ என வழங்கப்படுகிறது; இலக்கியங்களில் ‘கரையேறவிட்ட நகர்’ என்னும் பெயர் காணப்படுகிறது. அப்பர் இங்கே கரையேறியதற்குச் சான்று பகரும் முறையில் இவ்வூரில் அவர் பெயரால் மடம் ஒன்று உள்ளது. மற்றும், அவர் கரையேறிய இடத்தில் ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அப்பர் இங்கே கரையேறிய தால் கரையேற விட்டவர்) குப்பம் என்னும் பெயர் இவ்வூருக்கு ஏற்பட்டதென்றால், அப்பர் கரையேறுவதற்குமுன் இவ்வூருக்கு என்ன பெயர் இருந்திருக்கக்கூடும்? இவ்வினாவுக்கு விடையிறுப்பது கடினம், இருப்பினும் ஒருவாறு பதில் கூறலாம். அப்பர் கரையேறுவதற்கு முன் இவ்வூருக்கு வறிதே ‘குப்பம்’ என்னும் பெயர் இருந்திருக்கலாம்.

வண்டிப்பாளையம்

அடுத்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க கரையேற விட்ட குப்பத்திற்கு வண்டிப்பாளையம் என்னும் பெயர் ஏன் எப்போது ஏற்பட்டது? என்ற வினாவிற்கு விடை காண வேண்டும், பாதிரி மரம் மிகுதியாக இருந்த ஊர் பாதிரிப் புலியூர் ஆனது போல, வண்டிகள் மிகுதியாக இருந்த ஊர் வண்டிப்பாளையம் எனப் பெயர் பெற்றது என்று எளிதில் சொல்லத் தோன்றும். இப்படி நோக்கின், அப்படியொன்றும் வண்டிப் பாளையத்தில் வண்டிகள் இல்லை . உழவர் மிக்க ஊரிலாவது உழவுத் தொழிலுக்காக வண்டிமாடுகள் இருக்கும். இந்த ஊரோ நெசவாளர் மிக்க ஊர். இங்கே வண்டிகள் மிகுதியாக இருக்க வாய்ப்பே இல்லை. இவ்வூர்க்காரனாகிய நான் சிறுவனாயிருந்த போது ஒருநாள் என் தந்தையை நோக்கி, ‘நம்மூரில் அவ்ளளவாக வண்டிகள் இல்லையே - ஏன் வண்டிப் பாளையம் என்னும் பெயர் வந்தது?’ என்று வினவினேன், அதற்கு என் தந்தையார் சொன்ன பதில் இன்னும் நினைவில் இருக்கிறது:- “நூறு இருநூறு ஆண்டுகளுக்குமுன் வெள்ளைக்காரர்களும் துலுக்கர்களும் ஒருவரோடொருவர் கட்சிசேர்ந்து கொண்டு இந்த வட்டாரத்தில் சண்டை போட்டார்களாம். அப்போது அவர்களுடைய தளவாடங்களை ஏற்றிக்கொண்டு வந்த வண்டிகள் நம்மூர்ப் பகுதியில் ஏராளமாக விடப்பட்டிருந்தனவாம். தொடர்ந்து பலமுறை சண்டை நடந்ததால், நம்மூர்ப்பக்கத்தில் தொடர்ந்து வண்டிகள் விடப்பட்டிருந்தனவாம். அவ்வாறு வண்டிகள் விடப்பட்டிருந்த இடம் ‘வண்டிப் பாளையம்’ எனக் குறிப்பிடப்பட்டதாம். இப்படி எனக்குப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.” இஃது என் தந்தையாரின் பதில். இப் பெயர்க் காரணம் உண்மையானால், ஐரோப்பியர் போர்புரிந்து