பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை ஊர்கள்

401


பிரெஞ்சு படைத் தலைவரும் கவர்னருமான டுப்ளே (Dupleix) என்பவர் மட்டும் இந்தக் கோட்டையை நான்கு முறை தாக்கியிருக்கிறார். அவர் முதல்முறையாக 1746 டிசம்பர் தொடக்கத்தில் தாக்கினார்; தாக்குதல் பயனளிக்கவில்லை. அதே டிசம்பரில் இரண்டாம் முறையாகக் கடல் பக்கத்திலிருந்து தாக்கினார். அப்போதும் பயனின்றி, புயலால் அலைக்கழிக்கப் பட்டுப் புதுச்சேரிக்கு ஓடிவிட்டார். மூன்றாம் முறையாக 1747 மார்ச்சில் தாக்கிப் பார்த்தார். நான்காம் முறையாக 1748 சூனில் தாக்கினார்; ஆனால், லாரென்ஸ் என்னும் ஆங்கிலப் படைத்தலைவரால் விரட்டப்பட்டார்.

செயின்ட் டேவிட் கோட்டையின் தலையெழுத்து இம்மட்டோடு நின்றுவிடவில்லை. 1756இல் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் ஐரோப்பாவில் போர் நடைபெற்றதால் இங்கேயும் ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் போர் மூண்டது. பிரெஞ்சுக்காரர் செயின்ட் டேவிட் கோட்டையைக் கடுமையாய்த் தாக்கி இடித்துக் கேடு சூழ்ந்தனர். லாலி (Lally) என்னும் பிரெஞ்சுப் படைத்தலைவர் இக் கோட்டையைக் கடுமையாய்த் தாக்கி 1758 சூன் 2 ஆம் நாள் கைப்பற்றிக் கொண்டே விட்டார். 1760இல் ‘சர் அயர் கூட்’ (Sir Eyre Coote) என்னும் ஆங்கிலப் படைத் தலைவர் மீண்டும் பிரெஞ்சுக் காரரிடமிருந்து கோட்டையைக் கைப்பற்றினார்; அவர் 1761இல் புதுச்சேரியையும் பிடித்துக் கொண்டார். 1782இல் பிரெஞ்சுக்காரரும் திப்பு சுல்தானுமாகச் சேர்ந்து கொண்டு ஆங்கிலேயரிடமிருந்து மீண்டும் செயின்ட் டேவிட் கோட்டையைப் பிடித்துக் கொண்டனர். 1783 ஏப்ரலில் ஸ்டுவர்ட் (General Stuart) என்னும் ஆங்கிலப் படைத்தலைவர் செயின் டேவிட் கோட்டையைப் பிரெஞ்சுக்காரரிடமிருந்து மீட்பதற்காக முற்றுகையிட்டுத் தாக்கினார். இந்த நிலையில், ஐரோப்பாவில் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் அமைதி உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக 1783 சூன் 30 ஆம் நாள் செய்தி வரவே, கடலூர்ப்பகுதி ஆங்கிலேயர்க்கும் புதுச்சேரிப் பகுதி பிரெஞ்சுக்காரர்க்குமாக மீண்டும் கைம்மாறின. பிறகு நடந்த போரில் மீண்டும் புதுச்சேரி ஆங்கிலேயர் கைக்கு மாறி, மறுபடியும் பிரெஞ்சுக்காரர் கைக்கு வந்தது. இப்படியாகக் கடலூரும் புதுச்சேரியும் பலமுறை கைம்மாறிக் கைம்மாறி உலக நிலையாமையை உலகிற்கு எடுத்துக் காட்டின.

செயின்ட் டேவிட் கோட்டை பலமுறை பிரெஞ்சுக் காரர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்படாமல் இருந்திருந்தால், கடலூர் கல்கத்தா போல் பெருநகராக உருவாகிச் சென்னையின்கெ.26